×

ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பு: 700 கி.மீ தூரம் நெல்லூருக்கு மொபட்டில் சென்று மகனை மீட்ட தாய்: தெலங்கானாவில் நெகிழ்ச்சி

ஸ்ரீகாளஹஸ்தி: ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த மகனை 700 கி.மீ தூரம் நெல்லூருக்கு மொபட்டில் பயணம் செய்து தாய் மீட்டு வந்த சம்பவம் தெலங்கானாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம், போதன் பகுதியைச் சேர்ந்தவர் ரசியாபேகம், அரசு  பள்ளி ஆசிரியை. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.  அவரது கணவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது 2வது மகன் முகமது நிஜாமுதீன் இன்டர்மீடியட் முடித்துவிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவ அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், முகமது நிஜாமுதீன் இன்டர்மீடியட் சப்ளிமென்டரி தேர்வுகள் எழுத கடந்த மாதம் ஐதராபாத்திலிருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது, நெல்லூரில் உள்ள தனது நண்பரான நிஜாமுதீன் என்பவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது தெரியவந்தது. இதனால், நண்பரின் தந்தையை பார்க்க கடந்த மாதம் 12ம் தேதி நெல்லூர் சென்றார்.  இதற்கிடையே, கொரோனா வைரஸ் காரணமாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் முகமது நிஜாமுதீன் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. இதுகுறித்து முகமது நிஜாமுதீனின் தாய் ரசியாபேகத்திடம் தெரிவித்தார். அவர் போதன் பகுதியைச் சேர்ந்த போலீஸ் உதவி இயக்குனர் ஜெய்பால்ரெட்டியிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரது பரிந்துரை  கடிதத்தை ெபற்ற  ரசியாபேகம், கடந்த திங்கட்கிழமை காலை 700 கி.மீ தூரத்தில் உள்ள நெல்லூருக்கு மொபட்டில்  புறப்பட்டார். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் நெல்லூர் சென்று சேர்ந்தார்.

பின்னர், அவர் தனது மகன் முகமது நிஜாமுதீனை மொபட்டில் அழைத்து கொண்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். இருவரும் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினர்.  
இதுகுறித்து ரசியாமேகம் கூறுகையில், ‘‘மகன் மீது உள்ள பாசத்தால் அவரை பார்க்க என்னை வெகுதூரம் செல்ல தூண்டியது. இதனால் எத்தனை துன்பம் வந்தாலும் மகனை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வருவதே எனது நோக்கமாக இருந்தது. நான் ஆங்காங்கே வனப்பகுதி வழியாக மொபட்டில் அச்சமில்லாமல் சென்றேன். பல்வேறு பகுதிகளில் போலீசார் என்னை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸ் உதவி இயக்குனர் கொடுத்த கடிதத்தை காண்பித்ததும் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்தனர். இதற்காக காவல் துறைக்கு நன்றி’’ என்றார்.


Tags : home ,Nellore ,Mombat ,Telangana ,hometown ,Moped , Curfew, hometown, Nellore, moped. Son, Mother, Telangana
× RELATED திருக்கோவிலூர், நெல்லூரில் பயங்கரம்: இரு விபத்துகளில் 6 பேர் பலி