×

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது: பிரதமருக்கு காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: மலேரியா மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, ‘சர்வதேச மிரட்டலுக்கு இந்தியா அடிபணியக் கூடாது,’ என பிரதமர் மோடியை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.  கொரோனா தொற்று பாதித்தவர்களை குணப்படுத்த மலேரியா தடுப்பு மருந்து பயன்படுத்தலாம் என ஆய்வில் தெரியவந்தது. இதை தொடர்ந்து, இதற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின், பாராசிட்டமல் போன்ற மருந்துகளை அதிகமாக தயாரிக்கும் இந்தியா, அதை ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த தடை பாதி விலக்கி கொள்ளப்பட்டதால் இந்த மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. முன்னதாக, கடந்த 6ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், கொரோனாவை குணப்படுத்த உதவும் ைஹட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை ஏற்றுமதி செய்ய மறுத்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும் என எச்சரித்திருந்தார். டிரம்பின் மிரட்டலுக்கு பயந்துதான் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மோடி நீக்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தொடர்பாளர் பவான் கேரா நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரசால் சுகாதார பிரச்னை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பிரதமர் மோடி எந்த மிரட்டலுக்கும் அடிபணியக் கூடாது. இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால், பிரதமர் மோடி பயந்தோ அல்லது மிரட்டலுக்கு இணங்கியோ எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.

சர்வதேச உறவில் மிரட்டலுக்கு இடமில்லை. அவ்வாறு சர்வதேச உறவில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். வங்கதேசத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க நடந்த போராட்டத்தின்போது இந்திரா காந்திக்கு விடுத்த மிரட்டலுக்கு அவர் பயப்படவில்லை. எனவே, பிரதமர் மோடி நமது சிறப்பான பாரம்பரியம் மற்றும் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். 130 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியான பிரதமர் மோடியின் பொறுப்பு இந்தியாவுக்கு பதில் சொல்வதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அறுவடை செய்ய அனுமதிக்க வேண்டும் ராகுல் காந்தி கோரிக்கை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `ரபி பருவப் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால், ஊரடங்கு உத்தரவினால் அவற்றை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகள் இன்று இரட்டை சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்கள் உரிய பாதுகாப்புடன் அறுவடை செய்ய அனுமதி அளிப்பதே அவர்களின் நிவாரணத்துக்கான ஒரே வழி,’ எனக் கூறியுள்ளார்.

Tags : America ,Kong , US, PM Modi, Corona, Congress
× RELATED பிரதமர் நவராத்திரி வாழ்த்து