×

கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில் தெருக்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதால் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

* பட்டினியால் இறந்துவிடுவோம் என கதறல்
* சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ

திருவொற்றியூர்: எண்ணூரில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பகுதியில் தெருக்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதால், உணவுப்பொருள் வாங்க முடியவில்லை எனவும், பட்டினியால் இறந்துவிடுவோம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடசென்னையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திருவொற்றியூர், எண்ணூர்,  மாதவரம் போன்ற பகுதிகளில் மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று வந்த எண்ணூர் ராமமூர்த்தி நகரை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதையடுத்து, திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் இவர்களது வீட்டை தனிமை  படுத்தியதோடு, அருகே உள்ள பல தெருக்களையும் மூடி சீல் வைத்துள்ளனர். இங்குள்ள மக்கள் வெளியே செல்லவும், வெளியிலிருந்து இங்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ராமமூர்த்தி நகரை சேர்ந்த மக்கள் காய்கறி, மளிகை, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், கொரோனா வைரஸ் பாதிப்பால் இறப்பதற்கு முன்பு, பட்டினியால் குடும்பத்துடன் இறந்து விடுவோம், என பாதிக்கப்பட்ட மக்கள் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், ‘‘ராமமூர்த்தி நகரில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்பதற்காக அவர்கள் வசித்த தெருவையே முற்றிலுமாக அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதனால் இங்கு வசிக்கும் எங்களுக்கு எந்த உணவு பொருட்களும் கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கு பால் கூட வாங்குவதற்கு முடிவதில்லை. இதுகுறித்து நாங்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் முறையிட்டாலும், எங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. ஆனால் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியில் எங்களுக்கு எல்லா உதவியும் செய்வதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய்.கொரோனா வைரஸ் தொற்றால் உயிர் இழப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக எங்களை இப்படி அடைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் எங்களுக்கு உணவு கிடைக்காமல் பசியால் நாங்கள் இறந்து விடுவோம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தி எங்களுக்கு அத்தியாவசியப் பொருள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : area ,streets , Authorities, streets, area where coronavirus,infected ,suffering from lack , food
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...