×

அரசு வக்கீல்கள் சார்பில் ரூ.25 லட்சம் கொரோனா தடுப்பு நிவாரண நிதி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு வக்கீல்கள் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த ஒருவாரமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவும் மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி அளிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கோரிக்கை வைத்தார்.  அதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள்  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள்.

இந்த வகையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணியாற்றும் அரசு வக்கீல் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.  அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் அர்விந்த் பாண்டியன், எஸ்.ஆர்.ராஜகோபால், நர்மதா சம்பத் உள்ளிட்ட 11 கூடுதல் அட்வகேட் ஜெனரல்களும், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட அரசு வக்கீல்களும் இதுவரை சுமார் ரூ.25 லட்சம் நிவாரண நிதியை நெட் பேங்க் மூலம் அனுப்பியுள்ளனர்.


Tags : Government Prosecutors , Government attorneys, corona, relief fund
× RELATED 48 அரசு வக்கீல்கள் நியமனம்