×

தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 102 டிகிரி வரை வெயில் எகிறியது. அதைத் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று அதிகபட்சமாக திருச்சியில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. சேலம், கரூர் 101, மதுரை 100, திருத்தணி, வேலூர் 100.4, தஞ்சை, கோவை, பாளையங்கோட்டை, திருப்பத்தூர் 99, சென்னை 93 டிகிரி வெயில் நிலவியது. இதனால் தென் மாவட்டங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டு விருதுநகர், கோவை உள்ளிட்ட சில இடங்களில் லேசான மழை பெய்தது.

இதே நிலை மேலும் நீடிக்கும் என்பதால் வெப்ப சலனம் காணமாக இன்றும் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.


Tags : Tamil Nadu ,parts , Rain, rain,Tamil Nadu
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...