×

ரேஷனில் வரிசையில் நின்று அரிசி வாங்கிய நடிகர்

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கேரளாவிலும் ஊரடங்கு   பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அங்கு அனைவருக்கும்  15 கிலோ இலவச அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிரபல மலையாள  நகைச்சுவை நடிகரான மணியன்பிள்ளை ராஜுவும் ரேஷனில் நின்று இலவச அரிசி வாங்கினார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் பதிவில் கூறியுள்ளதாவது: கேரளாவில்  ரேஷனில் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது.  மனைவியின் பெயர் உள்ள குடும்ப கார்டை எடுத்துக்கொண்டு கடந்த இரு  தினங்களுக்கு முன் நான் எனது மகனுடன் திருவனந்தபுரம் ஜவகர்  நகரிலுள்ள  ரேஷன் கடைக்கு சென்றேன். அப்போது வழியில் என்னைப்  பார்த்த  ஒருவர் எங்கு செல்கிறீர்கள் என கேட்டார். நான் ரேஷன் கடைக்கு இலவச அரிசி  வாங்க செல்கிறேன் என்றேன்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இவ்வளவு  பெரிய ஆளான நீங்கள் இலவச அரிசி வாங்குவதற்கு வெட்கமாக இல்லையா என்று  என்னிடம் கேட்டார். ஆனால் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்று கூறிவிட்டு   நான் கடைக்கு சென்று 15 கிலோ  அரிசியை வாங்கினேன். வீட்டில் கடந்த சில தினங்களாக அந்த அரிசியைத் தான் சமைத்து குடும்பத்தோடு  சாப்பிட்டு வருகிறேன். இளமைக்காலத்தில் நான் மிகுந்த வறுமையில் வாடி  உள்ளேன். அப்போதெல்லாம் வீட்டில் ரேஷன் அரிசி தான். சாதத்தில் ஒரு பருக்கை கீழே விழுந்தால் கூட எனது தந்தை அடிப்பார்.  அப்படிப்பட்ட காலத்தை கடந்து தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

Tags : actor ,Rice , Ration, corona virus, actor Maniyanpillai Raju
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்