×

எப்போதும் முக்கியத்துவம் தராத நிலையில் இப்போது மட்டும் எங்களை கொண்டாடுவது ஏன்?தூய்மைப்பணியாளர்கள் உள்ளக்குமுறல்

சென்னை: எப்போதுமே எங்களுக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கி வைக்கும் நிலையில் இப்போது மட்டும் எங்களை கொண்டாடுவது ஏன் என தூய்மைப்பணியாளர்கள் தங்கள் மனக்குமுறலை வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.  இயற்கை சீற்றங்கள், பேரிடர் காலங்கள் மற்றும் அன்றாட வாழ்வில் தூய்மைப்பணியாளர்கள் இல்லாமல் நமது வாழ்வு இல்லை. நாடு தூய்மையாக இருக்க மற்றவர்களின் கழிவுகளையும், குப்பைகளையும் அப்புறப்படுத்தினாலும் நாள்தோறும் அவர்கள் தங்கள் உடல், உடைகளில் அசுத்தங்களை சுமக்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர், தூய்மைப்பணியாளர்கள், பத்திரிகையாளர்களை தவிர வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பல இடங்களில்  தூய்மைப்பணியாளர்கள் சேவையை பாராட்டி பொதுமக்கள் அவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவப்படுத்தி வருகின்றனர். ஆனால், சமூகத்தில் ஏற்படும் இதுபோன்ற அவசர காலகட்டத்தில் மட்டுமே தூய்மைப்பணியாளர்களை பொதுமக்கள் மதிப்பதாகவும், மற்ற நேரங்களில் அவர்களை ஒதுக்கிவைத்து தீண்ட தகாதவர்கள் போல் பார்ப்பதாகவும்தூய்மைப்பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ‘ தூய்மைப்பணியாளர்கள் தெய்வங்கள்’ என்ற வாசகம் இயற்கை பேரிடரின் போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்ற நேரத்தில் எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் மட்டுமே எங்களுக்கு முகக்கவசமும், கையுறைகளும் வழங்கப்படுகிறது. ஆனால், மற்ற நேரங்களில் எங்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அவை தரமானதாக இருப்பதில்லை. சுகாதாரப்பணிகளில் ஈடுபடும்போது தெருக்களில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டால் கூட சிலர் கொடுப்பதில்லை. சரியான நேரத்திற்கு சாப்பாடு கூட இல்லாமல் வேலை செய்து வருகிறோம். தெருக்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகையான குப்பை தொட்டிகள் இருக்கும்.

இதில் கூட பெரும்பாலான பொதுமக்கள் வகைபிரித்து குப்பையை போடுவதில்லை. ஒவ்வொரு தனிநபரும் செய்யவேண்டிய இந்த வேலையை கூட துப்புரவு பணியாளர்கள் மட்டுமே வகைபிரித்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் தெருக்களில் குவியும் குப்பைகளை அகற்றுவது எவ்வளவு கஷ்டம் என்று எங்களுக்கு மட்டுமே தெரியும். 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின் போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தது. இங்கு, ஆபத்தை கூட பொருட்படுத்தாமல்  தூய்மைப்பணிகளை மேற்கொண்டோம். ஆனால், இப்போது மட்டும் எங்களை கடவுள் போல் பார்த்து கொண்டாடுகின்றனர். நாட்டின் எதாவது ஒரு மூலையில் நாள் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

கடந்த மாதம் கூட சென்னையில் பெண்  தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.   தூய்மைப்பணி என்பது பருவகால வேலையோ அல்லது பேரிடர் காலத்தில் உள்ள வேலையோ கிடையாது. இது நிரந்தரமான பணி. இதேபோல், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்னும் இந்தியாவில் தான் உள்ளது. இதற்கு தடை சட்டம் இருந்தும் அது பின்பற்றப்படவில்லை. பேரிடர் காலங்களை தவிர்த்து மற்ற காலங்களில் பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. துப்புரவு பணி என்பது சமூகத்தின் உயிர்மூச்சு. யார் யாரோ போராட்டம் செய்கிறார்கள். எப்போதாவது  தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் செய்துள்ளார்களா. அப்படி போராட்டம் செய்தால் இந்த நாடு தூய்மையாக இருக்குமா என்பதை அனைவரும் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தற்போது கொரோனாவை வீழ்த்த உலக நாடுகள் உச்சரிக்கும் ஒரே சொல் ‘சுத்தமாக இருப்பது’. இந்த சொல்லை செயலில் காண்பிப்பவர்கள் துப்புரவு பணியாளர்கள். தனி நபர் கழிவு, மருத்துவ கழிவு, சாலையோர கழிவு, வீடுகளின் கழிவு, அலுவலக கழிவு என அனைத்து வகையான கழிவுகளையும் நாங்கள் மட்டுமே அகற்றுகிறோம். ஆனால், பணி நிரந்தரம் கூட இல்லாமல் வேலை செய்து வருகிறோம். எனவே, எங்களை அரசு நிரந்தர பணியாளர்களாக மாற்றி, ஊதிய உயர்வை அளிக்க வேண்டும். மேலும், பேரிடர் காலங்களில்  தூய்மைப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் காப்பீட்டு வழங்க வேண்டும். மக்களும் துப்புரவு பணியாளர்களுக்கு பேரிடர் காலங்கள் மட்டுமில்லாமல் அனைத்து நேரங்களிலும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

சென்னையில் 85 லட்சம் பேர் வசிக்கின்றனர்
மத்திய அரசின் கொள்கைப்படி 3  தூய்மைப்பணியாளர்கள் 1,000 நபர்களின் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், பேரிடர் காலங்களில் ஒரு  தூய்மைப்பணியாளர் சரியாக 1,200 நபர்களின் அனைத்து கழிவுகளையும் அகற்றுகிறார். நாள் ஒன்றுக்கு 700 கிலோ கழிவை ஒரு தூய்மைப்பணியாளர் அகற்றுகிறார்.

Tags : India, corona virus, doctors
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...