×

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 90,000 பேர் உள்ள நிலையில் பரிசோதனை கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு: 28 நாளில் 3684 பேருக்கு மட்டுமே ஆய்வு

* உபகரணங்கள் கிடைக்காமல் மருத்துவர்கள் திணறல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 90,000க்கும் மேற்பட்டோர்  பரிசோதனை செய்யப்படாத நிலையில் மாநிலம் முழுவதும் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கூடுதல் கருவிகளை வாங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உட்பட 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 411 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

484 பேருக்கு  பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான முடிவு இன்னும் வர வேண்டியுள்ளது. கடந்த 28 நாட்களில் 3,684 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  1,500 பேர் கொரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 90,000க்கும் அதிகமானோர் கடந்த 15 நாட்களாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என்பது தொடர்பாக தற்போது வரை பரிசோதனை செய்யப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு அது தொடர்பான அறிகுறி எதுவும் இருக்கிறதா என்பது குறித்து மருத்துவத்துறையினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்து வருகின்றனர்.

அதாவது காய்ச்சல், சளி, இருமல் இருக்கிறதா என்பதை மட்டும் விசாரிக்கின்றனர். அப்படி வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனக்கு அறிகுறி இருப்பது போன்று உள்ளதாக கூறினால் கூட, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி, வருவாய்துறை, மருத்துவ அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 14 கொரோனா பரிசோதனை ஆய்வகம் இருந்தும், 11 கொரோனா  பரிசோதனை செய்யும் கிட்(கருவி) தான் உள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து கொண்டு சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பது பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஆரம்பத்தில் 5 கிட் மட்டுமே இருந்தது.

தற்போது பரிசோதனை மையங்கள் அதிகரித்துள்ளதால், 11 கிட் மூலம் பரிசோதனை நடத்தப்படுகிறது. ஒரு கிட் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 40 முதல் 60 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடியும்.  இதை வைத்து பார்க்கும் போது ஒரு நாளைக்கு 500 முதல் 600 பேர் வரை மட்டுமே பரிசோதனை செய்ய முடியும். ஆனால் தற்போது 500க்கும் குறைவாகவே பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது. தற்போதைய நிலையில், மாநிலம் முழுவதும் 90 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது வரை பரிசோதனை செய்யப்படவில்லை. அவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்யும் கிட் இருக்கும் பட்சத்தில், ஆரம்ப கட்ட நிலையிலேயே கொரோனாவை குணப்படுத்தி விட முடியும். ஆனால், கொரோனா பரிசோதனை செய்யும் கிட் இல்லாத நிலையில், கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேரையும் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 1,580 பேருக்கு பரிசோதனையே நடத்தவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். தற்போது காய்ச்சல், சளி, இருமல் ஆகிய நோய்கள் இருந்தும், கொரோனா பாதிக்கப்பட்ட நாடு மற்றும் பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படுகிறது. அதிலும் தீவிர நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சமீபகாலமாக மர்ம காய்ச்சலால் உயிரிழப்புகள் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 பேர், திருச்சியில் ஒருவர், சேலத்தில் ஒருவர், காேவையில் ஒருவர், ஈரோட்டில் ஒருவர் என மாநிலம் முழுவதும் கொரோனா அறிகுறி உள்ளவர்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் பரிசோதனைக்கு முடிவு வருவதற்கு முன்னரே உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசிடம் கேட்டால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனக்கூறி வருகிறது. அதே நேரத்தில் அவர்களின் கொரோனா பரிசோதனை முடிவையும் சுகாதாரத்துறை வெளியிடுவதில்லை.   இந்த சூழ்நிலையில் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாத நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என்றும், உயிரிழப்புகள் இல்லை என்றும் சுகாதாரத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.  மத்திய அரசிடம் கொரோனா பரிசோதனை செய்யும் கிட் இல்லாத நிலையில், 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனோ பாதிப்பு இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும் கிட் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நமது நாட்டில் குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனம் மட்டுமே கொரோனா பரிசோதனை கிட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தால் நாடு முழுவதும் பரிசோதனை கிட் தயார் செய்து தர முடியாத நிலையிலும் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்ைக நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. 10 லட்சம் மக்களில் சராசரியாக வெறும் 32 பேருக்குத்தான் இந்தியாவில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இத்தாலியில் 10 லட்சம் பேரில் 8379 பேருக்கும், அமெரிக்காவில் 3,078 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீனாவில் கொரோனா பரவ ஆரம்பித்த உடனே மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து பிப்ரவரி மாதமே ெகாரோனா பரிசோதனை கிட் கொள்முதல் செய்து இருக்க வேண்டும்.

ஆனால், அதை செய்ய தவறியதன் விளைவாக கொரோனா பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போதைய நிலையில் தமிழக அரசும் கொரோனா பாதிப்பு தொடர்பாக வெளிப்படையாக தெரிவிக்காமல் மறைத்து வருகிறது. மேலும், லட்சக்கணக்கானோருக்கு தற்போது வரை பரிசோதனை செய்யப்படாத நிலையில், அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை. இதனால், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த பேரிடர் கால சமயத்தில் தமிழக அரசு எப்படி மக்களை காப்பாற்ற போகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

நவீன கருவிகள் இல்லை:
கொரோனா சோதனையை நடத்த தற்போதுள்ள பரிசோதனை கருவிகள் பழைய நிலையிலேயே உள்ளன. சாப்ட்வேர் புதுப்பிக்கப்பட்ட புதிய கருவிகள் இன்னும் தருவிக்கப்படவில்லை. இதனால் துல்லியமான சோதனையை நடத்துவதில் சிக்கல் உள்ளது. இதுதவிர மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் கவச உடை, மாஸ்க் உள்ளிட்ட  சாதனங்கள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் டாக்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல நகரங்களில் தனி அறைகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஊர்களில் பல மருத்துவர்கள் ஒரே அறையில் தங்க வைக்கப்படுள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் பாதுகாப்பு கவச உடைகளை மாற்றுவதற்கு கூட தனி அறைகள் ஒதுக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.


Tags : home inspectors ,Tamil Nadu , Tamil Nadu, Corona, China
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...