×

கொரோனா வைரஸ் எதிரொலி: வரும் 7-ம் தேதி நடைபெறவிருந்த 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 7-ம் தேதி நடைபெறவிருந்த 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரை கொரோனா வைரசால் 1965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

50 பேர் உயிரிழந்துள்ளனர். 151 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வைரஸ்  பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 7-ம் தேதி நடைபெறவிருந்த 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 2-ம் தேதி துவங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. முன்னதாக ஏப்ரல் 24-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31-ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது அதனையடுத்து ஏப்ரல் 7-ம் தேதியன்று 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 8 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : 12th Class Elections , Corona virus, general election, answer sheet editing, postponement
× RELATED நாடு முழுவதும் ICSE / ISC 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு