×

தேனி உழவர் சந்தையில் காய்கறி தொகுப்பு ரூ.150க்கு விற்பனை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி: தேனி புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் உழவர் சந்தையில் ரூ.150க்கு காய்கறி தொகுப்பு விற்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க ஊரடங்கு அமலில் இருப்பதால் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பால் விற்பனைக்கடைகள் திறந்திருக்க நேரக் கட்டுப்பாடு காரணமாக சமூக இடைவெளி குறையும் நிலை உள்ளது. சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் நெருக்கடியான காய்கறி மார்க்கெட்டுகள் பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறது.தேனி மாவட்டத்தில், தேனி உழவர் சந்தை தேனி புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு காய்கறி விற்பனை நடந்து வருகிறது. தேனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனையின்போது விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையில் உழவர் சந்தை நிர்வாகம், காய்கறி தொகுப்பினை ஒரு பையில் வைத்து விற்க முடிவு செய்தது.

இதன்படி, காய்கறி தொகுப்பு ரூ.150க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் முதல் விற்பனை துவக்கப்பட்டது. இந்த தொகுப்பில் கத்தரிக்காய் அரை கிலோ, தக்காளி 1 கிலோ, வெண்டைக்காய் கால் கிலோ, அவரைக்காய் அரை கிலோ, முருங்கைக்காய் கால் கிலோ, பச்சைமிளகாய் கால் கிலோ, பீன்ஸ் கால் கிலோ, கேரட் கால் கிலோ, உருளைக்கிழங்கு அரை கிலோ, சின்ன வெங்காயம் கால் கிலோ, பெரிய  வெங்காயம் அரை கிலோ, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஒரு கொத்து, கீரை ஒரு கட்டு, சவ்சவ் 1, நூக்கல் கால் கிலோ, முள்ளங்கி கால் கிலோ, வாழைக்காய் 3, எலுமிச்சை 4 ஆகியவை உள்ளது. ரூ.150க்கு இத்தனை பொருள்கள் விற்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Theni Tiller Market , Vegetable Package, Theni Tiller Market, Rs. 150, Public Happiness
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ