×

சிறையில் கொரோனா தொற்றை தடுக்க வயதானவர், நோயாளிகளுக்கு பரோல்: தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னை: சிறைச்சாலையில் கொரோனா தொற்றை தடுக்க வயதானவர், நோயாளிகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தமிமுன் அன்சாரி எம்எல்ஏ (மஜக பொதுச்செயலாளர்): கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக சிறைவாசி குடும்பங்களை சேர்ந்தவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். சிறையிலிருக்கும் தங்கள் உறவுகளை நினைத்து வாடுகின்றனர். சிறைவாசிகளுக்கும் மனித உரிமைகள் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அதன்படி இப்பிரச்னையை மனிதநேயத்தோடு தமிழக அரசு அணுக வேண்டும். தண்டனை சிறை கைதிகளுக்கு வழி காவல் துணையின்றி ஒருமாதகால பரோல் வழங்க வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசிலிக்க வேண்டும்.

கொரோனா தொடர்பான விவகாரத்தில் சிறைவாசிகள் குறித்து கடந்த வாரம் கருத்து கூறிய உச்ச நீதிமன்றம், வயதானவர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு பரோல் கொடுக்கலாம் என்றும் மாநில அரசுகளே அதில் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. சிறைவாசிகளும் மனிதர்கள் என்ற அடிப்படையில், அவர்களின் குடும்பத்தினர் உணர்வுகளை புரிந்து கொண்டு முதல்வர் மனிதாபிமானத்தோடு இதனை பரிசீலிக்க வேண்டும். அதுபோல் விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவது குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர்): தமிழக அரசும்  கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி உயர்மட்ட சட்டக்குழுவை அமைத்து பரோல் நடவடிக்கைகளை உடனடியாக துவக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளில் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த வழக்கு விசாரணையின் போது நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிப்பது தொடர்பாகவும் மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்றும் விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது.

ஆகவே, தமிழக அரசு நீண்டநாள் சிறைக்கைதிகளை விடுவிக்கவும், அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று வயதானவர், நோய்வாய்ப்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் என்பதால், 50 வயது மற்றும் நோய்வாய்ப்பட்ட சிறைக் கைதிகளையும் பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளில் கடந்த காலங்களைப் போன்று எவ்வித மத, இன, மொழி பாரபட்சம் பாராமல் அனைத்து தரப்பு கைதிகளையும் மனிதாபிமான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

Tags : parolees ,jail ,parties ,government ,Tamil Nadu ,Tamil Nadu Government for Political Parties Demand , Jail, Corona, Tamil Nadu State, Political Parties
× RELATED தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு...