×

கொரோனா பாதிப்பால் தவிக்கும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள தொழிலாளர்கள் ஓய்வறை கூடம்: முதல்வர் திறந்து வைத்த கட்டிடம்

திருப்போரூர்: ஆயிரம் பேர் தங்கும் வகையில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டிடம் கட்டப்பட்டு, இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை, தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நேரத்தில், 230 வடமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதியின்றி வசிக்கின்றனர். சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், மென்பொருள் நிறுவனங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. கேளம்பாக்கம் அடுத்த தையூரில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இங்கு பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், கர்நாடாக, உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளர்கள் 60  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதே பகுதியில் தகர ஷீட் அமைத்த வீடுகளில் தங்கி வேலை செய்கின்றனர்.

இதுபோன்ற தொழிலாளர்களுக்காக, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் சார்பில், 1000 பேர் தங்குவதற்கும், தூங்குவதற்கும், குளிப்பது உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. அதனை முதல்வர் எடப்பாடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இதையொட்டி, மேற்கண்ட பகுதியில் வேலை செய்த தொழிலாளர்கள், வெளியே வரக்கூடாது என கூறி, அவர்களுக்கான தகர ஷீட் அமைத்த வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம், தங்குமிட வசதிகள் செய்யவில்லை. இதனால் கொரோனா நோய் பரவுவது குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் அவர்கள் உள்ளனர். அவர்களுக்கு முக கவசமும் வழங்கவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வடமாநில தொழிலாளர்கள், தங்கியுள்ள  பகுதிக்கு அருகில் அரை கிமீ தூரத்தில் முதல்வர் திறந்து வைத்த, தொழிலாளர் ஓய்வுக்கூடம் உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 1000 பேர்  தங்கும் வகையில் படுக்கை, கழிப்பறை, ஏடிஎம், அம்மா உணவகம், ஓய்வறை ஆகியவை  உள்ளன. ஆனால், இதுவரை இந்த தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் பிளாட்பாரத்தில் தங்கும் நிலையில் அடிப்படை வசதி இல்லாமல், தகர  ஷீட் குடியிருப்பில் உள்ளனர். இவர்கள் அனைவரையும்  தற்போது பூட்டி வைத்துள்ள வடமாநில தொழிலாளர் ஓய்வுக்கூடத்தில் தங்க வைத்து,  முக கவசம் உள்பட பாதுகாப்புக் கருவிகளை வழங்க வேண்டும் என்றனர்.

கொடூர நிலை
செங்கண்மால் பகுதியில் உள்ள தகர ஷீட் அமைத்த ஒரே குடியிருப்பில்  218 ஆண்கள், 12 பெண்கள், 15 குழந்தைகள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு மின்விசிறி கூட வழங்கவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் தகரத்தால் அமைத்த  வீட்டில் கொப்புளங்கள் வரும் நிலையில் வசிக்கின்றனர். இவர்கள்  அனைவக்கும் 3 கழிப்பறைகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. அதுவும் மிக மோசமான  நிலையில் பராமரிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் குளிப்பதற்கு 2 பெரிய  தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு, அதில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு ஆண்களும், பெண்களும் மொத்தமாக குளிக்க வேண்டும்.



Tags : Corona Harnessed Workers ,Restroom ,Coroner ,Building ,CM ,Workers Restroom , Corona, Restroom, Chief
× RELATED பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில்...