×

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி தொற்றுநோய் பரப்பும் வகையில் சாலையில் சுற்றிய 3,779 பேர் கைது: 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றி திரிந்த 3,779 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2  ஆயிரம் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக காவல் துறையில் வடக்கு மண்டலத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றியதாக 289 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 269 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய மண்டலத்தில் நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக 224 வழக்குகள் புதிவு செய்து 183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  மேற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 408 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 4 மண்டலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஐபிசி 188, 269 ஆகிய பிரிவுகளின் கீழ் மொத்தமாக 3 ஆயிரத்து 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 779 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1,924 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையை  பொறுத்தவரையில் நேற்று காலை வரை 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்ததாக 468 பேர் மீது ஐபிசி 188, 269 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 155 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 7 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 207 வழக்குகளும் பதிவு ெசய்யப்பட்டுள்ளன. இதுதவிர போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 291 வழக்குகள் போக்குவரத்து போலீசார் சார்பில் போடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 73 ஆட்டோக்கள், 580 பைக்குகள், 7 இதர வாகனங்கள் என மொத்தம் 670 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : road ,Tamil Nadu , Tamil Nadu, 144 banned, arrested, 2 thousand vehicles seized
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி