×

உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனாவை எப்படி தடுப்பது?: ஜி - 20 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை

டெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகளாவிய பிரச்னையாக உருமாறியுள்ள நிலையில், அதை எதிர்கொள்வது குறித்து, ஜி - 20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம்  ஆலோசனை நடத்த உள்ளனர். கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைக்கிறது. உலகளவில் கொரோனா பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 21,200-ஐ தாண்டியது. நோய்  பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,22,566-ஐ தாண்டிவிட்டது. 35 நாடுகள் முற்றிலும் முடங்கின. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 672 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் வீட்டை விட்ட வெளியேற வேண்டாம் என பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இதர  ஐரோப்பிய நாடுகள் உத்தரவிட்டுள்ளன. கொரோனா மையம் கொண்டுள்ள இத்தாலியில் பலி எண்ணிக்கை 7,503ஐ தாண்டிவிட்டது. பாதிப்பு  74,386ஐ தாண்டியுள்ளது. சீனாவில் பலி எண்ணிக்கை 3,287 ஆக உள்ளது. 81,285 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் பலி எண்ணிக்கை 2,077-ஐ தாண்டிவிட்டது. ஸ்பெயினில்  பலி எண்ணிக்கை 3,647 ஆக  அதிகரித்துள்ளது. பிரான்சில் பலி எண்ணிக்கை 1,331 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,027 ஆக அதிகரித்துள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 247 பேர் இறந்துள்ளனர். புதிதாக 13,347-ஐ பாதிக்கப்பட்டனர். இதனால்,  அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சார்க் எனப்படும் தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.  அதைத் தொடர்ந்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த  நாடுகள் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து அவருடன் பேசினார்.

மோடியின் ஆலோசனையை அடுத்து, பொருளாதார ஒத்துழைப்புக்கான, ஜி - 20 அமைப்பின் கூட்டத்தை கூட்டுவதற்கு, சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது. அமைப்பின் தலைமை பொறுப்பில், சவுதி அரேபியா உள்ளது. இந்த, ஜி - 20  அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும்  அமெரிக்கா இடம்பெற்றுள்ளன. இதைத் தவிர, ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவின் இளவரசர், முகமது பின் சல்மான் அழைப்பை ஏற்று, ஜி - 20 நாடுகளின் தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தயுள்ளனர். அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு  ஒருங்கிணைந்த முயற்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாடும் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர்களுடைய அனுப வங்களும் பகிர்ந்துகொள்ளப்பட உள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Counsel ,Video Conference ,countries ,G - Leaders ,video conferencing ,world , How to stop Corona from ravaging the world ?: G - Leaders of 20 countries consulted today via video conferencing
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...