ஆவடி அருகே கண்டிகை பகுதியில் கால்வாயில் மூழ்கி இறந்த இரட்டையர் சடலம் மீட்பு: பெற்றோர் கதறல்

ஆவடி: ஆவடி அருகே முத்தாப்புதுப்பேட்டை, கண்டிகை பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்ட இரட்டையரின் சடலங்கள் கரை ஒதுங்கியது. இதை பார்த்த பெற்றோர் மகன்களின் உடல்களை கட்டி பிடித்து கதறி அழுதனர்.  ஆவடி அடுத்த திருநின்றவூர், பிரகாஷ் நகர், டவர் தெருவை சேர்ந்தவர் மோகன் (44). டிரைவர். இவரது மகன்கள் ஜஸ்டின் (13), ஜெபஸ்டின் (13). இரட்டையர்கள். இருவரும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் விடுமுறையை ஒட்டி ஜஸ்டின், ஜெபஸ்டின் இருவரும் நண்பர் தீபக் என்பவருடன் ஆவடி அருகே முத்தாப்புதுப்பேட்டை, கண்டிகை பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது, மூவரும் வேகமாக வந்த தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதை பார்த்து அங்கு நின்ற 2 வாலிபர்கள் ஓடி வந்து தண்ணீரில் குதித்து தீபக்கை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் ஜஸ்டின், ஜெபஸ்டின் இருவரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். தகவலறிந்து ஆவடி தீயணைப்பு நிலையத்திலிருந்து அதிகாரி வீரராகவன் தலைமையில் வீரர்கள் கிருஷ்ணா கால்வாயில் இறங்கி தண்ணீரில் தேடினர். பின்னர், இரவு நேரம் ஆனதால் தேடும் பணிகளை கைவிட்டு தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர்.  இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு ஆவடி அருகே வீராபுரம் முருகன் கோயில் அருகே கால்வாயில் இரட்டையர் சடலங்கள் கரை ஒதுங்கியது. இதனை அடுத்து பெற்றோர் மகன்களின் உடல்களை கட்டி பிடித்து கதறி அழுதனர்.

தகவலறிந்து முத்தாப்புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories:

>