×

வெளிநாட்டில் இருந்து வந்தவரை தனிமைப்படுத்த 100 குடும்பத்தினர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

சென்னை: வெளிநாட்டிலிருந்து வந்தவரை தனிமைப்படுத்தும் விதமாக, திருவேற்காட்டில் 100 குடும்பத்தினர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நபர் ஒருவர் துபாய் சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளார். அவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்து வீட்டிலேயே தனிமைப்படுத்தினர்.
மேலும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்த நபர், அதிகாரிகளின் உத்தரவை பொருட்படுத்தாமல் அலட்சிய நோக்கில் அடிக்கடி வெளியே சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த அந்த அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடமும், திருவேற்காடு போலீசாரிடமும் புகார் தெரிவித்தனர். புகாரையடுத்து பூந்தமல்லி தாசில்தார் காந்திமதி தலைமையில் வருவாய்துறை மற்றும் சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். மேலும் வெளிநாட்டிலிருந்து வந்த நபரை எச்சரிக்கை செய்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். மேலும் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். இதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு தாசில்தார் சீல் வைத்தார். மேலும் நகராட்சி சுகாதாரத்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் கிருமிநாசினி கரைசல் தெளித்தனர்.

அங்கு குடியிருக்கும் யாரும் வெளியே வரக்கூடாது என்றும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளிடம் பேசி அனைத்து குடும்பத்துக்கும் டோர்டெலிவரி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதேபோல் பூந்தமல்லி, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அந்தந்த குடியிருப்போர் சங்கத்தினர் பேசி முடிவு செய்து டோர் டெலிவரி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : foreigner ,apartment building , Revenue Officers, Seal, Corona
× RELATED வெளிமாநிலத்தவர்கள் வருகை அதிகரிப்பு...