×

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ரூ.34.60 கோடியில் அறுவை சிகிச்சை மையம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
* பால் உற்பத்தி திறன் அடிப்படையின் மூலம் பிறந்த கிடாரிகளின் வம்சாவழி சோதனை திட்டத்தின் மூலம் 20.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 180 உயர்ரக பொலி காளைகள் உற்பத்தி செய்யப்படும்.
* 25 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு விவசாயிகளின் பட்டா நிலங்கள் கண்டறியப்பட்டு, அதில் பசுந்தீவன புல் பயிரிட மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம் ₹37.50 கோடி மானியத்தில் வேளாண் உள்ளீடுகள் வழங்கப்படும்.  மேலும், அந்நிலங்களில் ₹50 கோடி மானியத்தில் ‘பிரதம மந்திரி கிரிஷி சின்ஜாயி யோஜனா’ திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன வசதிகள் செய்து தரப்படும்.
* திருவண்ணாமலை, மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூரில் உள்ள பால் பண்ணைகளில் பால் உபபொருட்கள் தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை மேம்படுத்த ₹119.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், கடினமான அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும், விரைவாகவும், உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பான சிகிச்சை அளிக்க நவீன Bio Safety Level-III   அறுவை சிகிச்சை மையம் ₹34.60 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ராணிப்பேட்டை வருவாய் மாவட்டத்திற்கு, புதிய சுகாதார மாவட்டம் ₹3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
* வறட்சி தாங்கி வளரும் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் வழங்க, 10.40 கோடி ரூபாய் வழங்கப்படும்.  
* நடப்பாண்டில் காஞ்சிபுரம்உள்பட10 மாவட்டங்களில் உள்ள திட உயிர் உர உற்பத்தி மையங்கள், ₹12.80 கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்கி, திரவ உயிர் உர உற்பத்தி மையங்களாக மாற்றப்படும்.
* நெல் ரகங்களின் பாதுகாவலர் நெல் ஜெயராமன் நினைவைப் போற்றும் வகையில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில், ₹50 லட்சத்தில் “பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’’ அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படும் 250 வட்டாரங்களில், நடப்பாண்டில் ₹40 கோடி மதிப்பீட்டில் நாற்றங்கால் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.  
* தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நடப்பாண்டில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* நடப்பு ஆண்டில், இயற்கைப் பண்ணைய முறையில் காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்யும் முறையை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி ஊக்குவிக்க, ₹15 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* ₹50 கோடி செலவில் 100 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், மின்னணு வர்த்தக தளம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* 2020-21ம் ஆண்டில் மேலும் 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க மாநில அரசு ₹25 கோடி நிதி ஒதுக்கும்.
* தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 50வது ஆண்டு நிறைவடைந்த சிறப்பைப் போற்றிடும் வகையில், கருத்தரங்குகளும் நடத்துவதற்காக அரசு 29 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கும்.
* பல்வேறு நாடுகள் பின்பற்றி வரும் தொழில்நுட்பங்களை நமது விவசாயிகள் காணவும்,  அவற்றை கடைபிடிக்கவும் ஏதுவாக, வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல, ₹4 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* பொது மற்றும் தனியார் தரவு உட்கட்டமைப்புகளை பாதுகாத்திடவும் வழிவகை செய்யும் “இணைய பாதுகாப்புக் கொள்கை” வெளியிடப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

500 ஆம்புலன்ஸ்கள்
* 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை  மேலும் வலுப்படுத்துவதற்காக, நடப்பாண்டில் 500 புதிய அவசரகால ஊர்திகள்  ₹125 கோடியில் வாங்கி, வழங்கப்படும்.
* அனைத்து அரசு  மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் சானிடரி நாப்கின் வழங்கப்படும்.

4 இடங்களில் மின்னணு உற்பத்தி தொகுப்பு மண்டலம்
உலகெங்கும் உள்ள மின்னணு உற்பத்தி  தொழில்களின் முதலீட்டை தமிழ்நாட்டில் ஈர்க்கும் விதமாக, ₹300 கோடி  மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன், 4 இடங்களில், மின்னணு உற்பத்தி தொகுப்பு மண்டலங்களை தமிழ்நாடு மின்னணு நிறுவனம்  அமைக்கும்.

டெல்டாவில் விவசாய கருவிகள் வாடகை
* காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள வேளாண்  பெருமக்களுக்கு தேவையான அதிக சக்தி கொண்ட 20 டிராக்டர்கள், டிராக்டரால் இயங்கக்கூடிய 10 நிலம் சமன் செய்யும் கருவிகள், 10 ரோட்டா பட்லர் என்ற சேறு கலக்கும் கருவிகள், 51 வைக்கோல் கூட்டும் கருவிகள், 5 நெல் தானிய  உலர்த்திகள் மற்றும் 10 ஹேரேக் நெல் அறுவடை இயந்திரங்கள் ஆகியவை ₹7.46  கோடியில் வாங்கப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்படுவது  உள்பட மொத்தம் ₹35 கோடியே 11 லட்சத்தில் வேளாண் பொறியியல்  சேவைகள் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

Tags : Government ,Omanthair ,Pannoku Hospital ,OMANTURAR Govt , OMANTURAR Govt.
× RELATED 6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம்...