×

மாற்றுத்திறனாளியின் புகாரை விசாரிக்காத டிஎஸ்பி, இன்ஸ்பெக்டருக்கு 2.50 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜ்குமார் ஜான். மாற்றுத்திறனாளியான இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஸ்ரீபெரும்புதூர் மாத்தூரில் எனக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் குடியிருந்தவர்கள் பிரச்னை செய்து வந்தனர். இதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு, அங்கு குடியிருந்த தம்பதியை வெளியேற்றினார். இதன்பிறகு, ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பாஸ்கர் என்பவர் பொறுப்பேற்றார்.

இந்தநிலையில், எனது இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தம்பதி மீண்டும் அதே இடத்தில் குடியேறினர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோரிடம் புகார் செய்தேன். இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே, போலீஸ் அதிகாரிகள் சிலம்பரசன், பாஸ்கர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், மனுதாரர் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் அதிகாரிகள் சிலம்பரசன், பாஸ்கர் ஆகியோர் இழுத்தடித்து உள்ளனர். இதன்மூலம், அவர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு இருப்பது தெரிகிறது. இதற்காக, அவர்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 2 மாதத்துக்குள் வழங்கி விட்டு, இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் இருந்து ரூ.1.50 லட்சமும், துணை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் இருந்து ரூ.1 லட்சமும் வசூலித்துக்கொள்ளலாம். மேலும், அவர்கள் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Inspector ,complainant ,Human Rights Commission , Transgender, DSP, Inspector, Human Rights Commission
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...