×

கொரோனாவை சமாளிக்கும் மாநில அரசுகளை பாராட்டி மத்திய அமைச்சரவை செயலாளர் கடிதம்

சென்னை: அனுபவம் இல்லாத  சூழ்நிலையில் கொரோனாவை சமாளிக்கும் மாநில அரசுகளை பாராட்டுவதாக, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபே கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவது உங்களுக்கு தெரியும். வளர்ந்து வரும் நாட்டின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சோதனை ஆய்வகங்களை அமைத்தல், தனிமைப்படுத்தல், அடையாளம் காணுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, அத்தியாவசியமற்ற இயக்கத்தையும் மக்கள் ஒன்று கூடுவதையும் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, பல மாநில அரசுகள் முன்கூட்டியே எடுத்துள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க அனைத்து முன்நடவடிக்கைகளை அரசு சட்டப்படி எடுக்கலாம். குறிப்பாக, கொரோனா உறுதியான பகுதிகள், அறிகுறி உள்ள மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கலாம்.  மருத்துவமனைகள், மருந்தகங்கள், மளிகைகடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்றவை மூடுவதற்கு கவனம் செலுத்த வேண்டும்.

தேவையில்லாத பயணங்களை தவிர்க்க, ரயில் போக்குவரத்துகளும் நிறுத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கவும், அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் நிறுவனங்களை நீங்கள் கோரலாம்.  சாதாரண தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்தையும் போக்க நடவடிக்கை எடுக்கலாம். மருத்துவ வசதி, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை கேட்டுள்ளீர்கள்.  நிர்வாகத்திற்காக மட்டுமே மருத்துவமனைகளை அடையாளம் கண்டு நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.  போதுமான சோதனை வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, மேலும் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த முன் அனுபவம் இல்லாத விஷயத்தை சமாளிக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ்கவுபே அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, அத்தியாவசியமற்ற இயக்கத்தையும் மக்கள் ஒன்று கூடுவதையும் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, பல மாநில அரசுகள் முன்கூட்டியே எடுத்துள்ளன.

Tags : Cabinet of Ministers ,State Governments ,Corona ,Secretary of State ,Union Cabinet , Corona, Secretary of State, Union Cabinet, Letter
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்