×

திருவள்ளூரில் ரயில், பஸ்கள் ரத்து: தொழிலாளர்கள் அவதி

திருவள்ளூர்: பயணிகள் ரயில் உட்பட அனைத்து ரயில்களும் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட நிலையில், பஸ்களும் இயக்கப்படாததால், திருவள்ளூரில் இருந்து தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. 10 பேருக்கு மேல் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பெரு வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களை மூடவும், மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளும் தீவிரமாக நடக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை 7 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தவிர்க்க மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு நடக்கும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி பொது மக்களும் ஊரடங்கு உத்தரவு கடைபிடித்தனர். இந்நிலையில் வரும் 31ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், பட்டறைவாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கி வருகிறது.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ரயில் போக்குவரத்தையே நம்பி உள்ளனர். வரும் 31ம் தேதி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது பலருக்கு தெரியவில்லை. வழக்கம்போல நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கு, ரயில் நிலையத்துக்கு பாதுகாப்பு போலீசார் சீல் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ரயில்கள் ரத்து குறித்த அறிவிப்பு பலகையை கண்டு, வேலைக்கு செல்வது எப்படி என தவித்தனர். சிலர், தங்களது செல்போனில், அறிவிப்பு பலகை மற்றும் ரயில் நிலையம் சீல் வைத்திருந்ததை படம் பிடித்து பணிபுரியும் அலுவலகத்துக்கு அனுப்பினர்.

பலர் 50 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம் கோட்ட நிர்வாகம் அறிவித்திருந்ததை நம்பி, திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கும் பஸ் இயக்கப்படாததால், 500க்கும் மேற்பட்ட பயணிகள் காத்து கிடந்தனர். பொது இடங்களில் பலர் ஒன்று கூடினால் கொரோனா பரவும் என கூறும் மாவட்ட நிர்வாகம், அரசு பஸ்களை 50 சதவீதம் இயக்குவதாக கூறிவிட்டு, இயக்காததால் ஒரே இடத்தில் 500க்கும் மேற்பட்டோர் கூடும் நிலை ஏற்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் பாதிக்குமோ என மக்கள் பீதியில் காத்து கிடந்தனர்.

Tags : Cancellation ,Tiruvallur Thiruvallur ,Avadi , Thiruvallur, Rail, Buses, Cancellation, Avadi
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!