×

மூத்த இயக்குனர் விசு காலமானார்

சென்னை: மூத்த இயக்குனர் விசு (74), நேற்று காலமானார்.  மேடை நாடகங்கள் எழுதி இயக்கி நடித்து வந்த விசு, 1977ல் பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் கதாசிரியரானார். தொடர்ந்து சதுரங்கம், அவன் அவள்  அது, மழலைப்பட்டாளம் உள்பட பல படங்களுக்கு கதை எழுதினார். 1982ல் கண்மணி பூங்கா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விசு, தொடர்ந்து மணல் கயிறு, புதிய  சகாப்தம், கெட்டிமேளம், சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி உள்பட பல படங்களை இயக்கினார். திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராகவும் பதவி வகித்தார். வசனம் பேசுவதில் தனி பாணியை கையாண்ட அவர், குடும்ப  உறவுகள் குறித்த படங்களை இயக்கினார். 2016ல் மணல் கயிறு 2ம் பாகத்துக்கு கதை எழுதி நடித்தார். இது விசுவின் கடைசி படமாகும்.

சில வருடங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், வாரத்துக்கு 3 முறை டயாலிசிஸ் செய்ததால் உடல்நிலை மோசமடைந்த நிலையில், பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை 4.15 மணியளவில் மாரடைப்பால் காலமானார். விசுவின் இறுதிச்சடங்கு இன்று மாலை சென்னையில் நடக்கிறது. மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘குடும்பத்தில் நிலவும் பாசத்தைக் கருவாக வைத்து படம் எடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற விசுவின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு’ என கூறியுள்ளார்.

Tags : Visu , Senior Director Visu has passed away
× RELATED தொடர் விடுமுறையால் முதுமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்