×

முக்கிய இடங்கள், சாலைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் ஜெட்ராடிங் இயந்திரம் மூலம் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு காரணாக சென்னையில் உள்ள அனைத்து கடைகள், வழிபாட்டுத் தளங்கள், மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்டவை என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன.

இதனால் சென்னையில் பெரும்பலான சாலைகள் வெறிச்சோடின. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் மாநகராட்சி சார்பில் கிருநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஏடிஎம் மையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர்  பிரகாஷ், துணை ஆணையர் குமரவேல் பாண்டியன், மதுசுதன் ரெட்டி, வட்டார துணை  ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆகாஷ், பி.என்.தர், நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்ட தலைமை  பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், நல உள்ளிட்ட அனைவரும் ஆய்வு மேற்கொண்டனர்.

முக்கிய சாலைகளில் சென்னை குடிநீர் வாரியத்தில் உள்ள ஜெட்ராடிங் இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையின் இருபுறமும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறி சந்தை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைப்போன்று மெட்ரோ ரயில் நிலைங்கள், முக்கிய ரயில் நிலையங்கள் என்று அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

* வலைதளத்தில் பிரார்த்தனை
வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், தேவாலயங்கள் மூடப்பட்டன. இதையடுத்து தேவாலய போதகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசங்கங்களை வெளிப்படுத்தினர். அதன்படி, ஆலந்தூர் எம்.கே சாலையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட ஏடிஎம் மையங்கள், அம்மா உணவகங்கள், மீன் மார்க்கெட் கடைகள், பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் அதில் பயணிகள் அமரும் இடம் பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களுக்கும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
அண்ணாநகர்: அமைந்தகரை 8வது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர், அரும்பாக்கம், வில்லிவாக்கம், அமைந்தகரை, ஷெனாய் நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோயில்கள், ரயில், பேருந்து நிலையங்கள், காய்கறி மார்க்கெட், பூங்கா, திரையரங்கம், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் லாரிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும், முறைப்படி கை கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக்கும் பணி நடைபெற்று வருகிறது. தண்டையார்பேட்டை: வடசென்னையில் பிரதான இடங்களான பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், மூலக்கடை கொடுங்கையூர் உள்ளிட்ட  அனைத்து பகுதிகளிலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டது.

* இறைச்சி, மீன் கடைகளில் அதிகாலை குவிந்த மக்கள்
சென்னை: கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் நேற்று அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும், எந்த கடையும் திறக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் அதிகாலையே மீன் மற்றும் இறைச்சி வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர்.

அதன்படி வட சென்னையின் முக்கிய இறைச்சி கூடமான புளியந்தோப்பு ஆடுதொட்டியில் அதிகாலை 4 மணி முதல் 300க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ஏராளமானோர் குவிந்ததால் சுமார் 9 மணி வரை  விற்பனை நீடித்தது. அதன்பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதேபோல், காசிமேட்டில் மீன் வாங்க அதிகாலை  மக்கள் கூட்டம் அலைமோதியது. ராயபுரம், வண்ணாரப்பேட்டை,  கொருக்குப்பேட்டை பகுதியில் 7 மணி வரை இறைச்சி கடைகள் செயல்பட்டன. இங்கு ஏராளமானோர் ஆட்டிறைச்சி வாங்கி சென்றனர்.

Tags : areas ,roads , Key locations, road, coronavirus, prevention works
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...