×

மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் தீவிரம்: மேலும் 12 பேருக்கு பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

மும்பை:  மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் புனேயில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மும்பையில் 10 பேருக்கும், புனேயில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 3 பேர் கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பைகுலாவில் உள்ள சைபி மருத்துவமனை, விலே பார்லேயில் உள்ள நானாவதி மருத்துவமனை, கிர்காமில் உள்ள எச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் தலா ஒருவரும் அனுதிக்கப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புனேயில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 2 பேர் நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கிடையே, ஒரேநாளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது மகாராஷ்டிரா அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பொதுமக்களிடையேயும் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்னும் என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
புறநகர் ரயில் மற்றும் பெஸ்ட் பஸ் சேவைகளை அடுத்த சில நாட்களுக்கு ரத்து செய்வது குறித்தும், மும்பை, புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வட் போன்ற கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களை சீல் வைப்பது குறித்தும் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
மும்பை மற்றும் மும்பை பெருநகர பிராந்தியத்துக்குட்பட்ட தானே, வசாய், விரார், மீரா-பயந்தர், பிவண்டி, கல்யாண், உல்லாஸ்நகர், நவி மும்பை, பன்வெல், பத்லாப்பூர், உரன், அலிபாக், கொப்போலி, கர்ஜத், மாதேரன் மற்றும் புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வட், நாக்பூர் ஆகிய நகரங்களில் அரசு தரப்பில் ஏற்கனவே பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களில் உள்ள அனைத்து தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர் உள்ளிட்ட கடைகள், தியேட்டர், டான்ஸ் பார், டிஸ்கொதே, பப் நீச்சல் குளம், பொது பூங்கா, உடற்பயிற்சி கூடம், நாடக அரங்கம் உட்பட பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மார்ச் 31ம் தேதி வரை மூட அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த தடையுத்தரவு 20ம்தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இன்று நாடு தழுவிய மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் முழு அடைப்பு நடைபெறுவதால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். இதனால், உணவுப் பொருட்கள், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.



Tags : Maharashtra , Maharashtra, Corona, Mumbai, Pune
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...