×

கொரோனா பாதிப்பு காரணமாக தென்காசி சோதனைச்சாவடியில் வாகன கட்டுப்பாடு: வரும் 31ம் தேதி வரை 3 மாநில எல்லைகள் மூட ஆணை

தென்காசி:   கொரோனா வைரஸ் எதிரொலியாக 3 மாநில எல்லை பகுதிகளை மூட வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தமிழக எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக  தமிழகத்திலிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா செல்லக்கூடிய எல்லைகள் இன்று முதல் மூடப்படுவதாக நேற்றைய தினம் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியானது கேரளாவிலிருந்து வரக்கூடிய ஒரே எல்லை சாலை இதுவாகும். எனவே, இந்த சோதனைச்சாவடியில், ஏற்கனவே, கொரோனா தொற்று பரவத்தொடங்கிய நாள் முதலே, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை, மற்றும் துப்புரவு பணியாளர்கள் என அணைத்து துறையை சார்ந்தவர்களும், இப்பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து, கேரளாவிலிருந்து தமிழகம் வரக்கூடிய வாகனங்களும் மற்றும் தமிழகத்திலுருந்து கேரளா செல்லக்கூடிய வாகனங்களும் இங்குள்ள தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும், அங்கிருந்து வரும் வாகனங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றன.

மேலும் வாகனத்தில் பயணிக்கும் நபர்களுக்கும் கொரோனா அறிகுறி ஏதேனும் இருக்கிறதா?  என பரிசோதிப்பதற்கு சிறப்பு முகாம்கள் அமைத்து, அவை தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. மேலும், இருசக்கர வாகனங்களில் வந்தால்கூட அவர்கள் அனைத்து பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதனை தொடர்ந்து, அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.


Tags : checkpoint ,Tenkasi ,Tenkasi Checkpoint , Corona, Damage, Tenkasi, Checkpoint, Katuppa, Borders, Order
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...