×

சீனா செய்த தவறுக்கு உலக நாடுகள் பெரும் விலையை கொடுத்து வருகிறது : கொரோனா வைரஸ் பரவல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம்

வாஷிங்டன் : சீனா செய்த தவறுக்கு உலக நாடுகள் பெரும் விலையை கொடுத்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த உயிர்கொல்லி வைரஸுக்கு உலகம் முழுவதும் 11, 384 பேர் பலியாகி உள்ள நிலையில், 2,75,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 81,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3,255 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவின் உக்ரம் அந்த நாட்டில் சற்று குறைந்துள்ளது. ஆனால் இத்தாலியை ஆட்டிப் படைக்கும் கொரோனாவுக்கு 4,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில் அந்த நாட்டில் 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இத்தாலி முதலிடம் பிடித்துள்ளது.இத்தாலியில் உயிர்பலி அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான்,ஸ்பெயின், அமெரிக்கா,ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

 அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா செய்த தவறுக்கு உலக நாடுகள் பெரும் விலையை கொடுத்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாவே காரணம் என்றும் அவர் கூறினார். கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று டிரம்ப் ஏற்கனவே பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீனா செய்த தவறே கொரோனாவுக்கு காரணம் என்று பகீரங்கமாக குற்றம் சாட்டி இருப்பது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிரம்ப் பேசுகையில்,சீன வைரசின் தாக்கத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் உருவான வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்குத் தெரியும் சிலர் அதிருப்தியில் உள்ளனர். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்,என்றார். இதற்கு இடையே சவூதி அரேபியாவில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை 14 நாட்களுக்கு அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.


Tags : countries ,Trump ,China ,coronavirus outbreak ,US ,world countries , Corona, virus, spread, US President Trump, condemnation
× RELATED உலகம் முழுவதும் வானில் வர்ணஜாலம்;...