×

உடைந்த கேட் வழியாக திடலில் நுழைந்து ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்

ஆலந்தூர்: மேற்கு வேளச்சேரி ஆதம்பாக்கம் 177வது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி நகரில் மாநகராட்சி விளையாட்டு திடல்  உள்ளது. இதனை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், இரவு நேரங்களில் சமூக  விரோதிகளின் கூடாரமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் இருந்து வருகிறது.  இதனிடையே, இந்த விளையாட்டு திடலில் குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான தூண்களும் அமைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தடைபட்டது.  இந்நிலையில்  கொரோனா நோய்கிருமி தொற்று பரவுவதை தடுக்க மாநகராட்சியில் உள்ள பூங்கா, விளையாட்டு திடல்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி, இந்த விளையாட்டு திடலின் பிரதான கேட்டை மாநகராட்சி ஊழியர்கள் பூட்டுபோட்டு பூட்டிவிட்டனர்.

அங்கு மாநகராட்சி சார்பில்  ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கொரோனா நுண்கிருமிகள் நோய் தொற்றை  தடுக்கும் பொருட்டு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டு திடல் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை  மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விளையாட்டு திடலின் கேட் உடைந்துள்ளதால், சரிவர மூடாமல் உள்ளது. இதனால், சிறுவர்கள் சிலர் உள்ளே நுழைந்து ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர். சம்மந்தப்பட்ட மாதகராட்சி அதிகாரிகள் இந்த விளையாட்டு திடலின் கேட்டை சீரமைக்கவும், எச்சரிக்கை காலம்  முடியும் வரை இதன் உள்ளே சிறுவர்கள் விளையாடுவதை தடுக்க அங்கு ஒரு காவலாளியை நியமிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : boys , West Velachery, Adambakkam, Shastri Nagar
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு