×

பிரான்சில் இருந்து சென்னைக்கு பார்சலில் வந்த 10 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்: சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை

மீனம்பாக்கம்: பிரான்ஸிலிருந்து கூரியர் பார்சலில் சென்னை வந்த 10 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் கூரியர் மற்றும் பார்சல்களை கையாளும் அஞ்சலகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் பார்சல்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, நேற்று இந்த அஞ்சலகத்திற்கு வந்த பார்ல்களை சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு முகவரிக்கு வந்த ஒரு பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பார்சலில், பியூட்டி பார்லரில் பயன்படுத்தும் கிரீம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, அதில் விலைவுயர்ந்த போதை மாத்திரைகளான  புளூபனிஷர் என்ற 158 போதை மாத்திரைகளும், அதே போதை மாத்திரை பவுடராக சுமார் 20 கிராமும் இருந்தது.

அதன் சர்வதேச மதிப்பு 10 லட்சம். இந்த வகை போதை மாத்திரை ஐரோப்பிய நாடுகளில் மது விருந்து பார்ட்டிகளில் உயர் வர்க்கத்தினர் மற்றும் செல்வந்தர்கள் பயன்படுத்தக்கூடியது என்பதும் தெரியவந்தது.  இதையடுத்து சுங்கத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பார்சலில் இருந்த அரும்பாக்கம் முகவரி, செல்போன் எண் குறித்து விசாரித்தபோது, அனைத்தும் போலி என்று தெரியவந்தது.  மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பார்சலில் குறிப்பிடப்பட்ட பெயருடை நபர் அந்த பகுதியில் ஒரு வீட்டில் சில மாதங்கள் மட்டும் நண்பர்களுடன் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார். அதன் பின்பு அவர் வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டார். அவருடைய பெயரில் 10 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த போதை மாத்திரை பார்சல் வந்துள்ளது என்பது தெரியவந்தது.

வாடகைக்கு இருந்த நபர் சர்வதேச போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்த நபர் தற்போது சென்னையில் வேறு ஏதாவது முகவரியில் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.  கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூரியரில் வந்த போதை மாத்திரைளையும் சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த வழக்கிலும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இரண்டு பார்சலிலும் ஒரே போதை மாத்திரை இருந்ததால் இரண்டு சம்பவத்திலும் ஒரே நபர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து போதை மாத்திரைகளும், போதைப் பவுடரும் பிடிபடுவது சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Customs ,France ,Chennai ,investigation , Francis, Madras, seizure of tablets, customs officers
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...