×

வழவழ சோப்பு போட்டு கழுவினால் கொழகொழ கொரோனா போய்விடும்: வைரஸ் ஆய்வாளரின் சூப்பர் டிப்ஸ்

கொரோனா வைரஸ் ஆய்வில் ஆய்வு (பிஎச்டி) பட்டம் பெற்றவர் பவித்ரா வெங்கடகோபாலன். இந்த வைரஸ் பற்றிய சந்தேகங்களுக்கு அவர் அளித்துள்ள விளக்கங்கள் வருமாறு: கொரோனா எப்படி பரவுகிறது? கொரோனா காற்றில் பரவும் நோய். முன்னெச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே இதை தடுக்க முடியும். முதியவர்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள். சீசன் ப்ளூ, கொரோனா வகையை சேர்ந்ததா? சீசனல் ப்ளூ என்ற வேறொரு வைரஸ் உள்ளது. இது ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பரவக்கூடிய வைரஸ். இதுவும் காற்றில் பரவக்கூடிய வைரஸ் தான். ஆனால், இது கொரோனா குடும்ப வகையை சேர்ந்தது கிடையாது. எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா பாதிக்காதா?  ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட எதிர்ப்பு சக்தியை பொறுத்தே இதன் தாக்கம் இருக்கும். எடுத்துக்காட்டாக, ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். அதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதனால், அவர்களை கொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.

மருந்து கண்டுபிடிக்கப்படுவது எப்போது?   அந்த பணி தீவிரமாக நடக்கிறது. மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, அது பாதுகாப்பானதா? மனிதர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு உள்ளதா? என்பதை ஆராய்ந்து நடைமுறைக்கு கொண்டு வரவே குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகளாகும். ‘மால்ஸ் வைரஸ்’ என்பதும் ஒருவகையான கொரோனா வைரஸ் தான். இந்த வைரசுக்கு ஒரு வேக்சின் தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை ஒப்பிட்டுதான் தற்போது கோவிட்-19 வைரசுக்கும் வேக்சின் தயார் செய்யப்பட்டு வருகிறது.
வெப்ப நாடுகளில் பரவும் வாய்ப்பு குறைவா? கொரோனா வைரஸ் இதுநாள் வரையில் குளிர் பகுதியில்தான் இருந்தது. இப்போதுதான், வெப்ப பகுதியிலும் பரவி உள்ளது. எனவே, வெயில் பகுதியில் கொரோனா பரவாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
அப்படி என்றால் தப்பிக்க என்னதான் வழி? நம்மையும், நம்மை சுற்றியுள்ள இடங்களையும் மிகவும் தூய்மையாக வைத்துக்கொள்வதுதான் ஒரே வழி. இது தொற்றுநோய். எனவேதான், கூட்டமான இடங்களில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி? நாம் இருமி விட்டு கைகளை கழுவாமல் கதவை தொட்டாலோ அல்லது ஒரு இடத்தை  தொட்டால் வேறொரு நபர் அதே இடத்தை தொடும் போது இந்த வைர ஸ் பரவ வாய்ப்புள்ளது. 1 முதல் 2 மீட்டர் இடைவெளியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதோ அல்லது தும்மும் போதோ அவருக்கு அருகில் உள்ள நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்றும். கை கழுவ தனிப்பட்ட சோப்புதான் பயன்படுத்த வேண்டுமா? இந்த வைரஸ் ஒரு ஜெல்லி போன்ற வடிவத்தை கொண்டது. கொழகொழ தன்மையுடன் வழுவழுப்பாக இருக்கும். குறிப்பாக, சோப்பை போட்டு கைகழுவும் போது நம் கைகளில் உள்ள பிசுபிசுப்பு தன்மை சென்று விடுகிறது. அதேபோல்தான், நாம் சோப்பை போட்டு கையை கழுவும் போது கைகளில் அந்த வைரஸ் இருந்தால் அது உடனடியாக உடைந்துவிடும்.  எந்த ஒரு சோப்பையும் போட்டு கையை கழுவலாம்.



Tags : researcher ,Antivirus Analyst , Corolla, Corona, Analyst
× RELATED இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தில்...