டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டித் தொடருக்கான சுடர் ஓட்டம், கிரீஸ் நாட்டின் பண்டைய ஒலிம்பியா நகரில் மார்ச் 12ம் தேதி ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல் அந்த நாட்டின் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் சுடர் நேற்று முன்தினம் ஜப்பான் ஒலிம்பிக் 2020 நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் சுடர் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தது. பின்னர் ஒலிம்பிக் சுடரை டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ் தலைவர் யோஷிடோ மோரியிடம் இருந்து ஜப்பானுக்காக ஒலிம்பிக்சில் 3முறை தங்கம் வென்ற தடாஹிரோ நொமுரா, சோவுரி யோஷிதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் விமானப்படை தளத்திலேயே ஒலிம்பிக் சுடரை இருவரும் ஏற்றினர். இந்த ஆண்டு கோடைகால ஒலிம்பிக்ஸ் ஜூலை 24ம் தேதி தொடங்குகிறது. கொரோனா பீதி காரணமாக ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளது.