×

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா ; தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை வழங்க சீனா முடிவு

பீஜிங்; கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியா உட்பட 10 நாடுகளுக்கு காணொலி மூலம் ஆலோசனை வழங்க சீனா முடிவு செய்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா, உலகத்தின் பல நாடுகளை தாக்கி, உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் உள்ள அந்தந்த நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 10,035 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,44,979 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் சுமார் 41 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 3400 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த ஒரு நாளில் புதிதாக யாருக்கும் கொரோனா பரவாத நிலையில், அங்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3245 ஆக உள்ளது. உயிர் பலி எண்ணிக்கை, சீனாவை காட்டிலும் இத்தாலியில் அதிகரித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவருவதால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இவர்களில் சுமார் 4500 பேர் அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள்.

கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. மேலும், பிரான்சில் சுமார் 11,000 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 370 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஈரானில் 1,284 பேரும், ஸ்பெயினில் 831 பேரும், இந்தியாவில் 4 பேரும் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுக்க உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் இந்நோயை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியா உட்பட 10 நாடுகளுக்கு காணொலி மூலம் ஆலோசனை வழங்க சீனா முடிவு செய்துள்ளது.

Tags : world ,Corona ,China ,India , Corona virus, preventive measures, China, India, video consultancy
× RELATED சீனாவில் உலக பாராபீச் வாலிபால்...