×

வெளிநாடுவாழ் தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஈரான், மலேசியா, பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பது தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது கன்னியாகுமரி ஆஸ்டின் (திமுக) பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 596 மீனவர்கள் உட்பட, தமிழகத்தை சேர்ந்த 712 மீனவர்கள் ஈரானில் உணவு, இருப்பிடம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் படகிலேயே தங்கியிருக்கும் நிலை உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற 300 மானவர்கள் கல்லூரிகள் மூடப்பட்டதால் எங்கு செல்வது என்று தெரியாமல் மணிலாவில் தவித்து வருகிறார்கள். இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தெரிவித்தும், முதல்வர் இது சம்பந்தாமாக கடிதம் எழுதியும் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி குளச்சல் பிரின்ஸ் (காங்கிரஸ்), நாகப்பட்டினம் அன்சாரி ஆகியோரும் பேசினர்.
இதற்கு பதில் அளித்து வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: ஈரான், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மலேசிய விமான நிலையத்தில் உள்ள 200 மாணவர்களையும் அழைத்துவர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக டெல்லி பிரதிநிதி மற்றும் தமிழக எம்.பிக்கள் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த மூன்று நாடுகளிலும் சுமார் 6,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களை மீட்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவு, தங்க இடம் வசதி இல்லாதவர்கள் முதலில் அழைத்துவரப்படுவார்கள். மற்றவர்கள் அடுத்தகட்டமாக அழைத்துவரப்படுவார்கள். அவர்கள் தனியாக பாதுகாக்கப்பட்டு பின்னர் நோய் தொற்று இல்லை என்ற பிறகே சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதனால் தான் காலதாமதம் ஆகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

அமைச்சரை ஈரானுக்கு அனுப்புங்கள்
சட்டப்பேரவையில் நேற்று உறுப்பினர் ஆஸ்டின் பேசும்போது, முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதாமல் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்கு அனுப்பி பிரதமரை நேரில் சந்தித்து வெளிநாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று கூறினர். அப்போது திமுக எம்எல்ஏக்கள், டெல்லி வேண்டாம், ஈரானுக்கு அமைச்சரை அனுப்பி வையுங்கள் என்று நகைச்சுவையாக கூறினர்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, “நான் ஈரானுக்கு போவதில் எந்த பிரச்னையும் இல்லை. அங்கு போய்விட்டு நேரே சட்டமன்றத்துக்குதான் வருவேன், பரவாயில்லையா?” என்றார். இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது.

Tags : Udayakumar ,Minister ,Tamils ,foreigners , Action to rescue foreign Tamils: Minister Udayakuma
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...