×

கொரோனா வைரஸ் பீதி நாகை மீனவர்கள் கடலுக்கு செல்வது இல்லை என முடிவு

நாகை: கொரோனா வைரஸ் பீதியையொட்டி நாகையில் மீனவர்கள் மீன்பிடிக்க வரும் 31ம் தேதி வரை கடலுக்குள் செல்வது இல்லை என்று முடிவு செய்துள்ளனர். மீன் விற்பனைக்கும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனானா வைரஸ் உலக முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவாமல் இருக்க வரும் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே போல் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சுகாதாரத்துறை மூலம் சோதனை செய்த பின்னரே மாவட்ட எல்லையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாகை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார செக்போஸ்ட் அமைக்கப்பட்டு 24மணி நேரமும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வருவோர்களை மருத்துவ குழுவினர் நேரடியாக வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாகை அக்கரைப்பேட்டை,கீச்சாங்குப்பம்,கல்லார்,ஆரிய நாட்டுத்தெரு, சாமந்தான்பேட்டை, நாகூர், நாகூர் மேலத்தெரு, வேளாங்கண்ணி உட்பட மீனவ கிராமங்களை உள்ளடக்கிய நாகை தாலுகா மீனவர்கள் ஆலோசனை கூட்டம் அக்கரை பேட்டையில் நேற்று நடந்தது.

இதில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் மீனவர்கள் எப்படி தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் தற்காத்து கொள்வது என்பது குறித்து விவாதம் செய்யப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் பைபர் படகுகளுக்கு விலக்கு அளிப்பதா, வேண்டாமா என்பது குறித்தும், கடலுக்கு சென்ற மீனவர்களை திரும்ப அழைப்பது குறித்தும் விவாதித்து முடிவெடுத்தனர். இதில் மீன்பிடித்துறை முகங்கள், மீன்ஏலக்கூடங்கள் மற்றும் மீன்மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நாகை வட்டத்துக்குட்பட்ட கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை உடனடியாக கரை திரும்பவும் தொடர்புடைய மீனவ பஞ்சாயத்துகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாகையில் தங்கியிருந்து மீன்பிடித்தொழில் ஈடுபடும் கேரளாவை சேர்ந்த மீனவர்களை சொந்த ஊர்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராம மீனவர்களும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும், கடலுக்கு சென்ற படகுகள் முழுமையாக கரை திரும்பி மீன் விற்பனையை நிறைவு செய்த பின்னர் மீன் விற்பனைக்கு தடை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதான மீனவ கிராம பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.

Tags : Coronavirus virus fishermen ,sea ,fishermen ,Naga , Corona virus panic Naga fishermen decide not to go to sea
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துக்கான...