×

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் எழும்பூர் ரயில்நிலையத்தில் 3 நுழைவாயில்கள் மூடல்: பரிசோதனைக்கு பிறகே பயணிகளுக்கு அனுமதி

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் எழும்பூர் ரயில்நிலையத்தின் 7 நுழைவாயில்களில் 3 நுழைவாயில்கள் மூடப்பட்டன. தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், அங்குள்ள 7 நுழைவாயில்களில் 3 நுழைவாயில்கள் மூடப்பட்டன. தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பிறகு தான் பயணிகள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி எட்வர்டு மற்றும் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசன் தலைமையில் ரயில்வே போலீசார் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே டிஎஸ்பி எட்வர்டு நிருபர்களிடம் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பயணிகள் அதிகமாக வருவதால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து சோதனை செய்ய முடியாததால், 3 நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே போலீசார் மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து 24 மணி நேரமும் கொரோனா சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனையின்போது கொரோனா வைரஸ் குறித்து அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். இந்த சோதனையில் ஆர்பிஎப், ரயில்வே போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : entrances ,train station ,Egmore ,Inspection ,Corona ,Railway Station , Corona, Egmore, Railway Station, Inspection, Permits
× RELATED பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம்...