×

மத்தியானம் 12 மணிக்கு சூரிய ஒளியில நின்னா, வைரஸ் பஸ்பமாயிடும்... மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் யோசனை

மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நமது நாட்டில் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. இப்போது, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சூரிய ஒளியில் நிற்பது நல்ல பலனை தரும். காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையில் சூரிய ஒளி நன்கு காயும். இந்த நேரத்தில் நாம் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் உடலில் சூரிய ஒளிபடும்படி நின்றால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வைட்டமின் டி கிடைக்கும். மேலும், கொரோனா போன்ற வைரஸ்கள் வெயிலில் அழியும். இந்த உண்மையை எல்லோரும் அறிந்துக் கொண்டு சூரிய ஒளியில் நிற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

* நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய: பெங்களூருவில் பரபரப்பு
கொரோனா பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கைது நடவடிக்கை கூட எடுக்கப்படுகிறது. ஆனாலும், வதந்திகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், பெங்களூருவில் புதுமையான  வதந்தியை சிலர் பரப்பி விட்டுள்ளனர். ‘பெங்களூருவில் கொரோனா வைரசை ஒழிக்க, இரவில் வானத்தில் இருந்து அரசு மருந்து  தெளிக்க உள்ளதால், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்,’ என்ற  தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாய் பரப்பி விடப்பட்டுள்ளது. இதை கண்டு மிரண்டு போன பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், ‘இந்த வதந்தியை கிளப்பியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை கொரோனா வைரசை கட்டுப்படுத்த சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வானத்தில் இருந்து அரசும் மருந்து தெளிக்கவில்லை. எனவே, மக்கள் இந்த வதந்தியை நம்ப வேண்டாம்,’ என்று தெரிவித்துள்ளது.

* வாகா எல்லை மூடல்
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 341 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகா எல்லையை உடனடியாக மூட பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நேற்று தொடங்கி 2 வாரங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும். இது தவிர ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவு பாதிப்புள்ள கராச்சியில் சர்ச்களில் பிரார்த்தனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது தவிர செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தக்கூடாது. தேவைப்பட்டால் கேள்விக்கான பதில்கள் வெளியுறவுத்துறை இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஆயிஷா பரூக்கி தெரிவித்துள்ளார்.

* கர்நாடகாவில் 144 தடை உத்தரவு
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, ‘சுகாதார நெருக்கடி நிலை பிரகடனம்’ செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், குடகு மாவட்டம், மடிக்கேரியை சேர்ந்த ஒருவருக்கு கொரானோ பாதிப்பு நேற்று உறுதியானது. இதன் மூலம், இம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வைரஸ் பரவல் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படும், கோலார், சித்ரதுர்கா, ஷிவமொக்கா, தாவணகெரே, கல்புர்கி, கொப்பள், குடகு ஆகிய 7 மாவட்டங்களில், பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

* பூரி ஜெகந்நாதர் கோயில் மூடப்படுகிறது
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள பிரபலமான ஜெகநாதர் கோயில் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் என கோயில் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக கோயில் தலைமை நிர்வாகி கிருஷண் குமார் கூறுகையில், ‘`வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 31 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். அதனால், கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேநேரத்தில் கோயில் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்,’’ என்றார். கடற்கரை பகுதி ஓட்டல்களில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் 2 நாட்களில் வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

* ஸ்ரீநகரில் அரசு போக்குவரத்துக்கு தடை
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 67 வயது பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 16ம் தேதி சொந்த ஊர் திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வசிக்கும் கன்யார் பகுதியை சுற்றி 300மீ பகுதி சீல்வைக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணம் சென்றுவந்த அவரை ஏராளமானோர் சந்தித்துள்ளதால் அவரது வீட்டுக்கு அருகே வசிப்பவர்கள் யாருக்கும் நோய் அறிகுறி இருக்கிறதா என வீடு வீடாக சென்று சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீநகரில் அனைத்து பொதுபோக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

* தேர்வுகள் ஒத்திவைப்பு
ஐசிஎஸ்இ வாரியம் மூலம் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்த தேர்வுகள் வரும் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக ஐசிஎஸ்இ வாரியத்தின் தலைவர் கெரி ஆரத்தான் அறிவித்துள்ளார். மார்ச் 31ம் தேதிக்கு பிறகு இந்த தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags : Health Minister ,Central , Midnight 12am, Sunlight, Ninna, Virus, Union Minister of Health
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...