×

பல தலைமுறைகளாக நடந்து வந்த குண்டம் திருவிழா: கொரோனாவால் முதல்முறையாக ஒத்திவைப்பு

சத்தியமங்கலம்: பல தலைமுறைகளாக இதுவரை எந்த தடையும் இல்லாமல் நடந்து வந்த பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் பக்தர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். முன்பொரு காலத்தில் இவ்வனப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், தங்களது மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டிச்செல்வது வழக்கம். பசுவும் புலியும் ஒரே இடத்தில் உள்ள தோரணப்பள்ளத்தில் நீர் அருந்தும் அற்புதமான இந்த வனத்தில் மாட்டுப்பட்டிகள் அமைத்து மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவர்.

அப்போது பட்டியில் உள்ள ஒரு பசு மாடு மட்டும் பால் தராமல் இருந்ததை பார்த்த மாடு மேய்ப்பவர் பசு மாடு ஏன் பால்தர மறுக்கிறது என எண்ணி இந்த பசுமாட்டை கவனித்தபோது பசு தினமும் வனப்பகுதியில் உள்ள தோரணப்பள்ளம் அருகே உள்ள ஓரிடத்திற்கு சென்று நிற்பதும், அங்கு மடியில் இருந்து பால் தானாகவே சொரிவதைக் கண்டு ஆச்சரியமடைந்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது சுயம்பு வடிவ சிலை இருந்தது. இதையடுத்து, அந்த இடத்தில் கூரை அமைத்து பண்ணாரி அம்மன் என பெயரிட்டு அம்மனை வழிபட்டு வந்தனர். அம்மன் ஆண்டுதோறும் பங்குனி மாதம் விழா எடுக்க உத்தரவிட்டதையடுத்து ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரசித்தி பெற்ற குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. கூரை அமைத்து சிறிய கோயிலாக இருந்த பண்ணாரி அம்மன் திருவருளால் நாளடைவில் பிரசித்தி பெற்று அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற தலமாக மாறிவிட்டது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் இக்கோயிலுக்கு கிழக்கு பகுதியில் விநாயகரும், கோயிலின் தென்மேற்கில் மாதேஸ்வரரும், மேற்குப்பகுதியில் தெப்பக்குளம் அருகே சருகுமாரியம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தீக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்தாண்டு திருவிழா மார்ச் 23 பூச்சாட்டுதலுடன் துவங்கி மார்ச் 31ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழாவும், ஏப்ரல் 13ம் தேதி மறுபூஜையும்  நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இதற்காக கோயில் பந்தல் அமைப்பதற்கு முகூர்த்தகால் நடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது.

அதிகாலை 4 மணிக்கு கோயில் அர்ச்சகர் சிறப்புபூஜைகளை செய்து குண்டம் இறங்கியபின் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் குண்டம் இறங்குவர். தமிழகத்தில் உள்ள எந்த கோயிலிலும் தொடர்ந்து 12 மணிநேரம் குண்டம் இறங்குவதில்லை. இத்தகைய பெருமை வாய்ந்த பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா இதுவரையிலும் ஒரு ஆண்டு கூட  நடத்தப்படாமல் இருந்ததில்லை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது முதல்முறையாக குண்டம் திருவிழா மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு நேர்த்திக்கடன் செலுத்தமுடியாமல் பக்தர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஊர்ப்பெரியவர்கள் தெரிவித்தனர். இதற்கு வேறு ஏதாவது மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாஸ்க் பதுக்கி வைத்து விற்றால் கடும் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் மாஸ்க் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கொரோனா அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க தாளவாடி மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் கோரன்டைன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

கலெக்டர் திடீர் ஆய்வு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலாலும், இத்திருவிழா நடத்தினால் அதிக பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள் என்பதாலும் திருவிழா நடத்துவது குறித்து நேற்று பண்ணாரி அம்மன் கோயில் திருமண மண்டபத்தில் ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது அறிவிக்கப்பட்ட தேதியில் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெறுவது மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா தாக்கம் குறைந்தபின் திருவிழா நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். கோயிலில் பக்தர்கள் சாமி கும்பிடுவதற்கு தடையில்லை. கோயில் வளாகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Gundam Festival ,generations ,Corona , Corona
× RELATED ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து...