×

எம்எல்ஏ.க்களை மீட்கச் சென்ற காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் கைது: கர்நாடக போலீசுடன் காரசார வாதம்

பெங்களூரு: மத்திய பிரதேச காங்கிரசை சேர்ந்த 22 அதிருப்தி எம்எல்ஏ.க்களும் பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளி அருகில் உள்ள சொகுசு  ஓட்டலில்  பத்து  நாட்களாக தங்கியுள்ளனர். இவர்களை சமாதானம் செய்து அழைத்துச் செல்வதற்காக, போபாலில் இருந்து மத்திய பிரதேச மாநில  முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் விமானம் மூலம் பெங்களூரு  கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார். அங்கிருந்து நேராக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு ஓட்டலுக்கு சென்றார். வழியில் போலீஸ் அதிகாரிகள் அவரை தடுத்து  நிறுத்தினர்.

அப்போது, போலீசாருக்கும்  திக்விஜய் சிங்குக்கும் கடும் வாக்கு வாதம் நடந்தது. ‘நான் தகராறு செய்ய வரவில்லை. மாநிலங்களவை தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். எங்கள் கட்சி எம்எல்ஏ.க்களை சந்தித்து பேசி அழைத்து செல்ல வந்துள்ளேன். என்னிடம் ஆயுதம் எதுவுமில்லை. சந்திக்க அனுமதிக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் போலீஸ்  அதிகாரிகள் என்னுடன் வாருங்கள்,’’ என்று துணை போலீஸ் கமிஷனரிடம் திக்விஜய்சிங்  கேட்டுக்கொண்டார்.

அதையேற்க  மறுத்த போலீஸ் அதிகாரிகள், ‘‘ஓட்டலில் உள்ள எம்எல்ஏ.க்கள் பாதுகாப்பு கேட்டு  எங்களுக்கு கடிதம் கொடுத்துள்ளனர்,’’ என்றனர். போலீசாரின் போக்கை  கண்டித்து திக்விஜய் சிங் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அவருடன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால்  சொகுசு ஓட்டல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 1 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்திய திக்விஜய் சிங்கை போலீசார் கைது செய்து எலகங்காவில் உள்ள அமிர்த்தஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்து விடுவித்தனர்.

இது குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ‘‘மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை  பலத்துடன் நல்லாட்சி நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பாஜ  வசம் இருக்க  வேண்டும், அதன் மூலம், சர்வாதிகார ஆட்சி நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில்  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரை பேரம்  மூலம் எம்எல்ஏ.க்களை  விலைக்கு வாங்கும் ஜனநாயக படுகொலையை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக பாணியில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை  பிடிக்க பாஜ திட்டமிட்டுள்ளது,’’ என்றார்.

22 எம்எல்ஏ.க்களையும் விடுவிக்க வேண்டும்
மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று ஆளுநர் லால்ஜி டாண்டனை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் ஆளுநரிடம்  வழங்கிய கோரிக்கை மனுவில்,‘பெங்களூருவில்  சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏ.க்கள் விடுவிக்கப்படுவதை ஆளுநர் உறுதி  செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில்,  ‘மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் என்ற முறையில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மற்றும் இதர காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள்,  கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ.க்களை சந்திக்க சென்றனர். ஆனால், பெங்களூரு போலீஸ் மற்றும் உள்ளூர்  நிர்வாகத்தால் திக்விஜய் சிங் மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் அவர்களை சந்திக்க விடாமல் தடுத்து கைது செய்யப்பட்டனர்.’ என  குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Kang ,Digvijay Singh ,Karnataka Police ,Congress , Congress, Digvijay Singh, arrested. Argument
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...