×

ஜெர்மனியில் இருந்து வந்தவரை சந்தித்த வேலூர் மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

சென்னை:  வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்த 77 பேரை மருத்துவ  குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே வேலூரை சேர்ந்த மருத்துவ மாணவி (18) மற்றும் 33 வயது உடைய ஆண் ஒருவர் நேற்று காலை  வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து, தங்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருப்பதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். மருத்துவ  மாணவி கூறுகையில், கடந்த சனிக்கிழமை சென்னை தாம்பரத்தை சேர்ந்த சக மாணவியின் சகோதரி அண்மையில் ஜெர்மனியில் இருந்து வந்ததால்  அவரை சந்தித்து பேசிவிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் 33 வயது உடைய ஆணும் தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் வந்ததாக தெரிவித்துள்ளார்.  உடனடியாக இருவரையும் தனி வார்டில் அனுமதித்தனர். கொரோனா வைரஸ் அறிகுறி இருக்க வாய்ப்பு உள்ளதால், ரத்தமாதிரிகளை எடுத்து சென்னை  கிண்டி ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். துபாயிலிருந்து கீழக்கரைக்கு திரும்பிய 35 வயதை சேர்ந்த ஒருவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், கொரோனா  அறிகுறி இருப்பது தெரிந்தது. இதையடுத்து இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபர் நேற்று மாலை துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பரிசோதனையில்  அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது தெரிய வந்ததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை மாவட்டம்,  காரைக்குடி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை வந்த திருப்பத்தூரை சேர்ந்த 25 வயது வாலிபர், சவுதியில் இருந்து  சமீபத்தில் வந்ததாகவும், இருமலுடன் கூடிய வயிற்று வலி உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து அவரை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பினர்.

திருவில்லிபுத்தூர் பால்கோவா விற்பனை பாதியானது: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பால்கோவா விற்பனை புவிசார் குறியீடு பெற்ற பிறகு  ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் விற்பனை கடந்த 3 நாட்களாக பாதிக்கு பாதி குறைந்துள்ளது. தயாரிப்பு பணியும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் பால்கோவா தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘‘இந்த அளவுக்கு பால்கோவா மந்தமாக விற்பனையானது கிடையாது.  24 மணி நேரமும் ஓடிய இயந்திரங்கள் கடந்த மூன்று நாட்களாக பாதி நேரம் மட்டுமே ஓடுகின்றன. திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு சுற்றுலாப்பயணிகள்  வருவது மிகவும் குறைந்ததே பால்கோவா விற்பனை குறைவுக்கு முக்கிய காரணம்’’ என்றனர்.

Tags : student ,Vellore ,hospitalization ,Germany , Vellore, student, corona, affect
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...