×

தமிழகத்தில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு: பேரவை செயலாளர் சான்றிதழ் வழங்கினார்'

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் சான்றிதழ் வழங்கினார். தமிழகத்தில் திருச்சி சிவா (திமுக) மற்றும் அதிமுகவில் விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், சசிகலா புஷ்பா, மார்க்சிஸ்ட் ரங்கராஜன் உள்ளிட்ட 6 பேரின் பதவி காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து காலியாகும் 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்தது.

தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. சட்டப்பேரவையில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை எம்பி சீட் கிடைப்பது உறுதியானது.
அதன்படி, திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த 9ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான தமாகா சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய 3 பேர் கடந்த 12ம் தேதி மனு தாக்கல் செய்தனர். இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன், இளங்கோ யாதவ் ஆகிய 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

மனு தாக்கல் செய்த 9 பேரின் மனுக்கள் மீது சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அலுவலக அறையில் கடந்த 16ம் தேதி பரிசீலனை நடந்தது. இதில், திமுக சார்பில் மனு தாக்கல் செய்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒரு எம்எல்ஏக்கள் கூட முன்மொழியாததால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற நேற்று (18ம் தேதி) கடைசி நாள். அதன்படி, நேற்று மாலை 3 மணி வரை யாரும் தங்கள் மனுக்களை வாபஸ் பெறவில்லை.

இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரும், அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து திமுக வேட்பாளர்கள் 3 பேரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை நேற்று மாலை 3.45 மணிக்கு சட்டப்பேரவை செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, அதிமுக வேட்பாளர்கள் 3 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் மாலை 4.30 மணிக்கு சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.தமிழகத்தில், 6 மாநிலங்களவை எம்பிக்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், வருகிற 26ம் தேதி மாநிலங்களவை எம்பிக்கான தேர்தல் நடைபெறாது. வெற்றி பெற்ற திமுக மாநிலங்களவை எம்பிக்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.இளங்கோ ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது திமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

* திமுக பலம் 7ஆக உயர்வு
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு நடந்த தேர்தலில் 3 திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் மாநிலங்களவையில் திமுக எம்பிக்களின் பலம் 7ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் 10 எம்பிக்களை கொண்டிருந்த அதிமுகவின் பலம் தற்போது 8ஆக குறைந்துள்ளது. இதுதவிர வைகோ, ஜி.கே.வாசன், அன்புமணி ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். மக்களவையில் மொத்தமுள்ள 39 எம்பிக்களில் திமுக கூட்டணி எம்பிக்கள் 38 பேரும், அதிமுக எம்பி ஒருவர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajya Sabha ,Tamil Nadu ,AIADMK ,DMK ,MP election , Tamil Nadu, Rajya Sabha MP, Election, Competition, DMK, DMK candidates
× RELATED அமேதியில் போட்டியிட ராகுல்...