×

பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து பணியாற்ற உத்தரவு: இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

நெல்லை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லையில் இன்று பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல மாநிலங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுஇடங்களில் கிருமி நாசினி தெளித்தல், வெளிமாநிலங்களில் இருந்து பயணிகளிடம் பரிசோதனை ஆகியன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், காய்கறி மார்க்கெட், ரயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் பஸ்களில் சுகாதாரம் பேண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அரசு மற்றும் தனியார் பஸ்கள் டிரிப் முடிந்தவுடன் நன்கு சுத்தம் செய்யப்பட வேண்டும். நோய் தொற்று பயணிகளுக்கு ஏற்படாத வகையில் லைசால் உள்ளிட்ட கிருமி நாசினியால் பஸ்களை கழுவி சுத்தம் செய்திட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் பயணிகளுடன் ஒருநாள் முழுக்க பயணிப்பதால் அவர்கள் முக கவசம் அணிந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி இன்று காலை முதலே நெல்லையில் அரசு பஸ்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றினர். நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முகம்மது தலைமையிலான ஆர்டிஓ அலுவலகத்தினர் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இவற்றை கண்காணித்தனர். மேலும் ஆம்னி பஸ்களிலும் திரைச்சீலைகள் அகற்றுப்பட்டுள்ளதா என்பதையும் நேற்று இரவு முதல் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்தனர்.

தனியார் பஸ்களிலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றிட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.மேலும் ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஒரு டிரிப் முடிந்தவுடன் கைகளை சோப்பால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தேவையேற்படின் அவர்களும் முக கவசம் அணிந்து பணியாற்ற கேட்டு கொண்டுள்ளனர். வெளி மாநில பஸ்களை பொறுத்தவரை எல்லையோர பகுதிகளில் அவற்றை சோதனை செய்த பின்னரே, தமிழகத்திற்குள் அனுப்புகின்றனர். இருப்பினும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ்களில் அதிக கூட்டத்தை தவிர்க்குமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டு கொண்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பழகுநர் உரிமம், புதிய பழகுநர் உரிமம் ஆகியவை ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் நெல்லை உள்ளிட்ட ஆர்டிஓ அலுவலகங்களும் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.

Tags : Bus drivers ,conductors , Bus drivers, conductors, face shield
× RELATED வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து...