×

நிர்பயா கொலை குற்றவாளி அக்ஷயின் மனைவி விவாகரத்து கேட்டு மனு: தூக்கு தண்டனையை காலதாமதப்படுத்த சூழ்ச்சி என சந்தேகம்!

அவுரங்காபாத்: நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷயின் மனைவி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், முகேஷ்குமார் சிங், பவன்குப்தா,  வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய  நால்வருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்த நிலையில், இவர்கள், சட்ட விதிகளை பயன்படுத்தி நீதிமன்றத்திலும், ஜனாதிபதிக்கும் மாறி, மாறி மனு அனுப்பினர். ஆனால், தற்போது அனைத்தும் முடிவடைந்து வரும் 20ம் தேதி காலை 5.30 மணியளவில் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமாரின் மனைவி புனிதா தேவி, விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். பீகாரின் அவுரங்காபாத் நகரில் நபிநகர் பகுதியில் வசித்து வரும் புனிதா தேவி, குடும்ப நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவரது வழக்கறிஞர் முகேஷ் குமார் சிங், பாலியல் குற்றத்தில் கணவர் ஈடுபட்டார் என கூறி பெண் ஒருவர் விவாகரத்து கோர சட்டத்தில் ஒரு பிரிவு உள்ளது என கூறியுள்ளார். நிர்பயா வழக்கில் தனது கணவர் ஒன்றுமறியாதவர் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என தவறாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என்றும் சமீப காலம்வரை அக்ஷயின் மனைவி கூறி வந்த நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ஒரு கற்பழிப்பு குற்றவாளியின் விதவை என்ற பெயரோடு வாழ விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய புனிதா தேவி, என் கணவர் நிரபராதி. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய விரும்புகிறேன், என கூறியுள்ளார். வரும் 20ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், தண்டனையை காலதாமதப்படுத்தும் ஒரு பகுதியாக, இந்த விவாகரத்து மனு மற்றொரு திட்டமிடலாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Tags : Akshay ,Widow ,convict , Nirbhaya case, Akshay Kumar Singh, wife, divorce
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!