×

சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதால் வெறிச்சோடிய நகரம்: கொரோனா பீதியில் கொடைக்கானல்

கொடைக்கானல்: கொரோனா பீதி எதிரொலியாக சுற்றுலாத்தலங்களை மூட உத்தரவிட்டுள்ளதால், கொடைக்கானல் வெறிச்சோடி காணப்படுகிறது. வட்டக்கானலில் தங்கி உள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பீதி எதிரொலியாக, ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டு விட்டன. இதனால் சுற்றுலாப்பயணிகளின்றி கொடைக்கானல் வெறிச்சோடி காணப்படுகிறது. இங்குள்ள வட்டக்கானல் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆண்டுதோறும் பல நாட்கள் தங்கி செல்வது வழக்கம். குறிப்பாக, இஸ்ரேல் நாட்டு யூத இனத்தை சேர்ந்தவர்கள், இங்கு 3 முதல் 6 மாதங்கள் வரை தங்கி வழிபாடுகளை நடத்தி செல்வார்கள். கொரோனா பீதியால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அனைவரும், உடனடியாக வெளியேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மாலை கொடைக்கானல் ஆர்டிஓ சிவக்குமார் தலைமையில் நகராட்சி ஆணையாளர் நாராயணன் மற்றும் கொடைக்கானல் போலீசார், தாசில்தார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், வட்டக்கானல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள சுமார் 20 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை, உடனடியாக அவர்களது நாட்டுக்கு செல்ல உத்தரவிட்டனர்.

இங்கு தங்கியிருந்த அமெரிக்க சுற்றுலாப்பயணி வின்சென்ட்டுக்கு, அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளார். கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அறைகள் ஒதுக்க வேண்டாம் என கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. அறிக்கையில், இன்று முதல் கொடைக்கானலில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்கள் மூடப்பட வேண்டும். கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அறைகள் தர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : City ,tourist destinations ,panic ,Kodaikanal ,Corona , Corona
× RELATED வார விடுமுறையையொட்டி ஏற்காடு,...