×

இன்று பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை சீமை கருவேல மரத்தால் பாழாகும் கூவம் ஆறு

* அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
* அழியும் நிலையில் விவசாயம்

சென்னை: சீமை கருவே மரத்தை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால் கூவம் ஆறு பாழாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான விவசாய கிராமங்கள் அழியும் நிலையில் உள்ளன.
திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகில், கடந்த 64 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட கேசாவரம் அணை 437 மீட்டர் நீளம் கொண்டது. கல்லாறில் வரும் தண்ணீர் எப்போதும் கொற்றலை ஆற்றுக்கு செல்லும் வகையில் அணை கட்டப்பட்டுள்ளது.
கூவம் ஆற்றுக்கு பிரியும் இடத்தில், 16 ஷட்டர்கள் மூடப்பட்ட நிலையில் இருக்கும். கொற்றலை ஆறு வழியாகச் செல்லும் நீர் பூண்டி மற்றும் செங்குன்றம் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. பூண்டி மற்றும் செங்குன்றம் ஏரியில் நீர் நிரம்பிய பின்னரே கூவம் ஆற்றில் உள்ள மதகுகள் திறக்கப்படும். இந்த தண்ணீர் பேரம்பாக்கம், அதிகத்தூர், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம், பருத்திப்பட்டு, திருவேற்காடு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக 72 கி.மீ., தூரம் சென்று சென்னை நகருக்குள் நுழைந்து நேப்பியர் பூங்கா அருகே கடலுக்குள் செல்கிறது.

இதில், ஜமீன்கொரட்டூர் பகுதியில் உள்ள அணைக்கட்டில் இருந்து புதுச்சத்திரம், நேமம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்ல வசதியாக கிளை ஆறு பிரிகிறது. மேலும், கூவம் ஆற்றில் இருந்து 22 கால்வாய்கள் பிரிகின்றன. இந்த ஆற்றுப்பாசனம் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. திருவள்ளூர் மாவட்ட விவசாயத்தின் ஆறாக விவசாயிகளால் அழைக்கப்படுவது கூவம் ஆறு. நரசிங்கபுரம், பேரம்பாக்கம், கடம்பத்தூர், அதிகத்தூர், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக செல்லும் இந்த கூவம் ஆற்றில் சீமைக்கருவேல மரம் அடர்ந்து வளர்ந்து ஆற்றின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து பாழாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய கொடிய தாவரமான சீமைகருவேலம் வெளிநாடுகளில் நச்சுத் தாவரமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை இன்றிப் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி பாதுகாத்துக் கொள்ளும் தன்மை இந்த மரங்களுக்கு உண்டு. மழைநீரை உறிஞ்சிக் கொண்டு நிலத்தடிக்கு நீர் செல்வதை இத்தாவரம் தடை செய்து விடுவதால், நீர் ஆதாரம் முழுவதுமாக பாதிக்கிறது. கூவம் ஆற்றை பெருமளவில் ஆக்கிரமித்து, படர்ந்து, விரிந்துள்ள இத்தாவரங்களின் அடர்த்தியும், அளவுக்கு அதிகமான வளர்ச்சியும் கூவம் ஆற்றை பாலைவனமாக மாற்றும் அபாயம் உள்ளது. கூவம் ஆற்றுக்கு நீர்வரத்தைப் பெறும் கால்வாய் வழிகளும் முற்றிலுமாக தூர்ந்து சிதிலமடைந்து இருப்பதால், கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்வது பல இடங்களில் தடைப்பட்டுள்ளது. பல விளைநிலங்களையும், விவசாயிகளையும் பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் மெத்தனமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

* எல்லை கற்கள் நட்டு 12 ஆண்டுகள் ஆகியும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள்...!
வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து, 12 ஆண்டுகளுக்கு முன், கூவம் ஆறு துவங்கும் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து, ஆற்றின் இருபுறமும் அளந்து எல்லைக் கற்களை நட்டனர். ஆனால், இதுநாள் வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

* சேதமடைந்த மதகு
கூவம் ஆற்றின் குறுக்கே, புதுச்சத்திரம் அருகே ஜமீன் கொரட்டூர் பகுதியில், 150 ஆண்டுகளுக்கு முன் அணைக்கட்டு மற்றும் தலை மதகு அமைக்கப்பட்டது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணைக்கட்டின் ஒரு பகுதி, 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. மேலும், மதகு பகுதியில் உள்ள, 12 ஷட்டர்களும் துருப்பிடித்து மோசமான நிலையில் உள்ளது.

Tags : Cauvery River , Today, the Public Works Department, the grant request, the Koovam River
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை