×

கொரோனாவால் வருமானம் அடியோடு போச்சு: விமான நிறுவனங்கள் திவாலாகும் ஆபத்து: சிஏபிஏ அவசர எச்சரிக்கை

மும்பை: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதத்தில் பெரும்பாலான நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதனால், விமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இதே நிலை நீடித்தால் வரும் மே மாதத்தில் பல விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும் என்று விமான போக்குவரத்து ஆலோசனை அமைப்பான ஆசிய பசிபிக் விமானப் போக்குவரத்து அமைப்பு (சிஏபிஏ) எச்சரித்துள்ளது.
“அரசுகளும் விமான நிறுவனங்களும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதால், சீனாவில் இருந்து அனைத்து நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகளை நிறுத்திவிட்டன. அ்ப்படியே குறைந்த அளவில் விமானங்களை இயக்கினாலும் பயணம் செய்வதற்கு பயணிகள் யாரும் முன்வரவில்லை. இதனால், விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இதனால் கடன் சுமை அதிகரித்து வருகிறது. அரசுகளின் அறிவிப்புகளும் செயல்களும் விமான நிறுவனங்களை மேலும் பாதித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களும் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளதால் அவர்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.” முன் எப்போதும் இல்லாத ஒரு அசாதாரணமான சூழ்நிலையை விமான நிறுவனங்கள் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளும் விமான நிறுவனங்களும் இணைந்து இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது அவசியத்திலும் அவசரமானது. இல்லை என்றால், விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிடும் அபாயம் உள்ளது. உதாரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அந்த நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து ரத்து செய்து அறிவித்தார். இதனால், ஐரோப்பிய நாடுகளின் விமான நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இது தொடர்பாக முன்கூட்டியே ஐரோப்பிய தலைவர்களுடன் டிரம்ப் ஆலோசனை நடத்திய பின்னர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று தனது அறிக்கையில் சிஏபிஏ சுட்டிக் காட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் சீனாவில் உள்ள விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும் அவை பெரும்பாலும் அரசு நிறுவனங்களாக இருப்பதால் அவற்றின் பாதிப்பு பெரியதாக இருந்தாலும் அரசு பார்த்துக் கொள்ளும். அமெரிக்காவில் பெரும்பாலான விமான நிறுவனங்களுக்கு அந்த அரசின் ஆதரவு கரம் இருப்பதால் மானிய உதவியால் பிரச்னையை சமாளித்துவிடும். அதேபோல் வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்களும் அவற்றின் உரிமையாளர்களால் பாதுகாக்கப்பட்டுவிடும். ஆனால், இந்தியா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகாமல் தடுக்க வேண்டும் என்றால் அரசுகளும் விமான நிறுவனங்களும் கலந்து ஆலோசித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால்தான் பிரச்னையில் இருந்து மீள முடியும் என்று எச்சரித்துள்ளது.

Tags : Corona ,airlines ,CAPA ,associations , Corona, Income, Airlines, CAPA
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...