×

ஆர்டிஓ அலுவலகங்களில் மார்ச் 31ம் தேதி வரை எல்எல்ஆர், லைசென்ஸ் வழங்குவது நிறுத்தம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை:போக்குவரத்துத்துறையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் மேற்கொள்ளப்படும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமானது போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று மாலை 5 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக, தலைமையக கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், உள்பட அதிகாரிகள், ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் தலைவர் அப்சல், பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியதாவது: கொரோனா வைரஸ் நோயினை உலகளாவிய நோய்த் தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன் படுத்துகின்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 21,092 பேருந்துகள் அனைத்தும் கடந்த 9ம் தேதி முதல் முறையாக கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

386 பேருந்து நிலையங்களிலும் தொடர்புடைய மாநகராட்சி, நகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  மேலும், 7,590 தனியார் பேருந்துகள், 4,056 மினி பேருந்துகள் மற்றும் 879 ஆம்னிப் பேருந்துகள் என ஆகமொத்தம் 12,525 பேருந்துகளிலும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் திரைச்சீலைகள் அகற்றப்பட்டு, குளிர்சாதனத்தின் அளவு குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டு  உள்ளது. மேலும், நாளது வரையில் வழங்கப்பட்டு வந்த போர்வைகலானது பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர, 26,670 பள்ளி வாகனங்களையும், 7,521 கல்லூரி வாகனங்களையும் முறையாக சுத்தம் செய்து இயக்குமாறும், இப்பணிகளை அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் வாயிலாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக மாநில எல்லைக்குட்பட்ட 21 போக்குவரத்து சோதனை சாவடிகளிலும், வெளி மாநிலத்திலிருந்து நமது மாநிலத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் முறையாக கண்காணித்து, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கள் அளித்த பேட்டி: பஸ் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு தகுந்தாற்போல் பஸ்களில் எண்ணிக்கையும் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் புதிதாக பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் கொடுப்பது 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் தேதி முடிந்தவர்கள் வாங்கிக்கொள்ளலாம். ஒரே இடத்தில் கூடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களின் எண்ணிக்கையை பொருத்து பஸ்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Tags : Vijayabaskar ,LLR ,RTO Offices ,Minister ,Stop , RTO, License, Stop: Minister MR Vijayabaskar, Information
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்