×

திருவள்ளூரை சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா?: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அடிக்கடி வெளி மாநிலத்துக்கு லாரி ஓட்டி சென்று வந்த திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை டிரைவருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால், அவரை சிகிச்சைக்கென சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த சிட்ரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (48). லாரி டிரைவர். இவர், அடிக்கடி சென்னையில் இருந்து பிளாஸ்டிக் பைப்புகளை ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றிக்கொண்டு சென்று வருவது வழக்கம். கடந்த 3 நாட்களுக்கு முன் ஊத்துக்கோட்டையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக லேசான தொடர் இருமல் இருந்ததால், நேற்று இரவு அவர்,  திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கொரோனா அறிகுறி உள்ளதால், உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர். ஒருமணி நேர முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, லாரி டிரைவர் வெற்றிவேல் அவசர ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பினர்.

இதனால் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை நேற்று இரவு ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. யாரையும் மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் மிகுந்த பாதுகாப்போடு லாரி டிரைவர் வெற்றிவேலை சென்னைக்கு அனுப்பினர். பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வந்ததால் கொரோனா வைரஸ் தாக்கியிருக்குமோ என்ற அச்சத்தில் லாரி டிரைவர் வெற்றிவேல் சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் முழு பரிசோதனைக்கு பிறகு இதுகுறித்த விவரம் தெரியவரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : Lorry driver ,Corona Thiruvallur ,Thiruvallur , Thiruvallur, Lorry Driver, Corona? Permission
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...