×

யெஸ் வங்கி திவால் எதிரொலி பங்கு முதலீடு செய்தவர்கள் சிக்கலில் தவிக்கும் பரிதாபம்

புதுடெல்லி: யெஸ் வங்கியின் பங்குகளை 3 ஆண்டுக்கு விற்க முடியாது என்று அரசு அறிவித்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். யெஸ் வங்கி வராக்கடன் பிரச்னையால் கடும் நிதிச்சிக்கலில் தவித்த யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அதன் நிர்வாக பொறுப்பு ஸ்டேட் வங்கி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திவால் ஆன நிலையில் உள்ள இந்த வங்கி பங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை தூக்கி நிறுத்த அரசு, கடைசியில் பங்கு முதலீடு செய்தவர்கள் தலையில் கையை வைத்துள்ளது.

இந்த நடவடிக்கையால் யெஸ் வங்கியின் பங்குகள் மதிப்பு பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்தது. ஓராண்டுக்கு முன் ரூ.290 ஆக இருந்த யெஸ் வங்கியின் பங்கு ஒன்றின் விலை, கடந்த 6ம் தேதி பங்கு ஒன்றின் விலை ரூ.5.55 ஆக குறைந்தது. இதனால், கடும் அதிர்ச்சியில் இருந்த முதலீட்டாளர்கள், மறு சீரமைப்பு திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டபிறகு பங்குகளை விற்று ஒரளவுக்கு நஷ்டத்தை குறைக்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், நம்பிக்கையும் ,மத்திய அரசின் அடுத்த அறிவிப்பால் வீணாகிபோய்விட்டது.

யெஸ் வங்கியில் 100க்கும் குறைவான பங்குகளை வைத்திருப்பவர்கள் அவற்றை முழுமையாக விற்கலாம். ஆனால், 100க்கும் மேல் பங்குகளை வைத்திருப்பவர்கள் அவற்றில் 25 சதவீதத்தை மட்டுமே தற்போது விற்க முடியும். மீதமுள்ள 75 சதவீத பங்குகளை அடுத்த 3 ஆண்டுக்கு மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. 2023 மார்ச் 13ம் தேதிக்கு பிறகுதான் அவற்றை விற்க முடியும். இது யெஸ் வங்கி பங்குகளை வாங்கி கடும் நஷ்டத்தில் தவிப்பவர்களை நெருக்கடியில் தள்ளி உள்ளது. இந்நிலையில், யெஸ் வங்கியின் பங்குகள் விலை படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் பங்குசந்தையில் யெஸ் வங்கியின் பங்கு விலை 58 சதவீதம் உயர்ந்து ரூ.58.65 க்கு விற்பனை ஆனது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டால் தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்க முடியாமல் முதலீட்டாளர்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.


Tags : investors ,bankruptcy ,Yes Bank , Yes Bank, Bankruptcy, Stock Investment, Pity
× RELATED அமலாக்கப்பிரிவு தன் அரசியல்...