×

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி; களக்காடு தலையணை இன்று மூடப்பட்டது: மணிமுத்தாறு அருவிக்கு செல்லவும் தடை

களக்காடு: சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே புரட்டி போட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கேரளாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பக்கத்து மாவட்டமான நெல்லை மாவட்டத்திற்கு பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சுற்றுலா தளங்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை சுற்றுலா தலம் இன்று முதல் மூடப்பட்டது. இதையொட்டி தலையணை நுழைவு கேட் அடைக்கப்பட்டுள்ளது. அங்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ ஆலோசனைபடி வனசரகர் புகழேந்தி தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின்றி தலையணை வெறிச்சோடி காணப்படுகிறது. இதுபோல் திருக்குறுங்குடி நம்பி கோயில் மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 31ம்தேதி வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, சொரிமுத்தய்யனார் கோயில் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் இன்று முதல் வனத்துறை தடை விதித்துள்ளது. இதையடுத்து மணிமுத்தாறு அருவி பகுதியில் நுழைவு வாயில் மூடப்பட்டு வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா தாக்குதல் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.



Tags : Corona , Corona, stiletto pillow
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...