×

கொரோனாவால் கோழி விலை வீழ்ச்சி: ஆட்டுக்கறி விற்பனை விறு விறு...தென் தமிழகத்தின் மிகப்பெரிய ஆட்டுச்சந்தையில் விறுவிறு விற்பனை

திருமங்கலம்: கொரோனா அச்சத்தால் கோழிக்கறி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆட்டுக்கறி விற்பனை கூடி உள்ளது. இதனால் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் கோழிகளை தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானதால், கறிக்கோழிகளின் விற்பனை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால், ஆட்டுக்கறிக்கு மவுசு கூடி வருகிறது. இதனால், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடக்கும் ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.6 ஆயிரம் வரை விற்ற ஆடுகள் தற்போது ரூ.8 ஆயிரம், 9 ஆயிரம் என விலை அதிகரித்து வருகிறது. இது ஆடு வளர்ப்போர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஆடு வியாபாரி சுப்புராஜ் கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பால் கோழிக்கறி விற்பனையும், விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.170க்கு விற்ற கோழிக்கறி தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. ரூ.6க்கு விற்ற முட்டை ரூ.3க்கு விற்கப்படுகிறது. ஆட்டுக்கறியை விரும்பி வாங்குகின்றனர். கடந்த மாதம் கிலோ ரூ.500க்கு விற்ற ஆட்டுக்கறி, தற்போது ரூ.800க்கு விற்கிறது. அதே நேரத்தில் ஆடுகளின் வரத்தும் அதிகமில்லை’’ என்றார். விருதுநகர் மாவட்ட ஆடு வியாபாரிகள் சங்கத்தலைவர் கோபால் கூறுகையில், ‘திருமங்கலம் ஆட்டுச்சந்தை தென்தமிழகத்தின் பெரிய சந்தையாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக வியாபாரிகள் கேரளாவில் ஆடுகளை வாங்குவதை தவிர்த்துவிட்டு ஆந்திரா, மகாராஷ்ராவில் வாங்கி வருகின்றனர். அசைவ பிரியர்கள் கோழிக்கறி வாங்குவதை தவிர்த்துவிட்டு, ஆட்டுக்கறி பக்கம் திரும்பியுள்ளதால், ஆடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பொதுவாக தீபாவளி, பொங்கல், பக்ரீத் உள்ளிட்ட விழா காலங்களில் ஆடுகளின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், கொரோனா தாக்கத்தால் ஆட்டுக்கறி விலை உயர்ந்துள்ளது. திருமங்கலம் சந்தையில் விற்பனையும் அதிகரித்துள்ளது’’ என்றார்.

முகத்தை மூடி டோக்கன் விநியோகிக்கும் ஊழியர்கள்

திருமங்கலம் ஆட்டுச்சந்தை நுழைவாயில் ஆடுகளுக்கு நுழைவுச்சீட்டு (டோக்கன்) விநியோகம் செய்யப்படுகிறது. இந்த டோக்கன் கொடுக்கும் ஊழியர்கள் கொரோனா அச்சத்தால், தங்களது முகங்களை துண்டால் மூடியபடி டோக்கன்களை விநியோகம் செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஆட்டுச்சந்தையில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆடுகளும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகிறது. இருமல், தும்மல், அருகே நின்று பேசுவதால் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எங்களிடம் முகக்கவசம் எதுவும் இல்லை. இதனால், முகத்தை துண்டால் மூடியபடி டோக்கன் கொடுக்கிறோம்’’ என்றனர்.

Tags : Corona ,Nadu , Corona, poultry, lamb, sheep market, sales
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...