×

சார்க் நாடுகளுக்கான கொரோனா அவசரகால நிதிக்கு இந்தியா ரூ.75 கோடி வழங்கும்

* பிரதமர் மோடி அறிவிப்பு  
* உலக நாடுகள் வரவேற்பு
புதுடெல்லி: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை எதிர்கொள்வது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகள் ஏற்றுக் கொண்டன. அதன்படி, வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு பிரதமர் முகமது சோலே, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி, பூடான் பிரதமர் லோடே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, பாகிஸ்தான் பிரதமரின் சுகாதாரத்துறைக்கான சிறப்பு உதவியாளர் ஜாபர் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.இதில் பிரதமர் மோடி பேசியதாவது:தெற்காசிய பிராந்தியத்தில் 150 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவி உள்ளது. ஆனாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.   கடந்த ஜனவரி மாதத்திலேயே இந்தியாவுக்கு வரும் பயணிகளை கண்காணிக்கத் தொடங்கி விட்டோம். அதைத்தொடர்ந்து பயணம் மேற்கொள்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

படிப்படியான நடவடிக்கையினால் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாதிக்கப்படக்கூடிய மக்களை சென்றடையவும் பல்வேறு விசேஷ ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் சிக்கிய 1,400 இந்தியர்கள் மற்றும் பிற அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களை இந்தியா பத்திரமாக மீட்டு அழைத்து வந்துள்ளது.கொரோனாவை எதிர்க்கொள்ள கொரோனா வைரஸ் அவசரக்கால நிதியை நாம் உருவாக்க வேண்டும். இந்த அவசரகால நிதிக்கு இந்தியா சார்பில் முதற்கட்டமாக ரூ.75 கோடி வழங்க தயாராக இருக்கிறோம். மற்ற நாடுகளும் அவரவர் விரும்பிய தொகையை வழங்கலாம்.வைரஸ் தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்க நாங்கள் நோய் கண்காணிப்பு அமைப்பை தயாரித்துள்ளோம். இதற்கான சாப்ட்வேரை சார்க் நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.பிரதமரின் பேச்சுக்கு இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின்  தலைவர்கள் அவசரகால நிதியத்தை தொடங்க முழு ஆதரவு தெரிவித்தனர்.

இதிலும் பாகிஸ்தான் விஷமம்
வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி ஜாபர் மிஸ்ரா, இதிலும் காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைத்தார். ‘‘கொரோனா  வைரஸ் பரவும் நிலையில், காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இந்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்’’ என அவர் கூறினார். அனைத்து நாடுகளும் ஒன்றிணைத்து செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், பாகிஸ்தானின் இத்தகைய பேச்சு பல தரப்பினரையும் அதிருப்தி அடைய செய்யும் விதத்தில் அமைந்திருந்தது.

Tags : countries ,SAARC ,India ,Corona Emergency Fund , India, Rs.75 crore , Corona Emergency Fund , SAARC countries
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...