×

நெல்லையில் இருந்தும் பந்தாடப்பட்டது இரண்டும் கெட்டான் நிலையில் கோவில்பட்டி அருகே 12 கிராமங்கள்: தூத்துக்குடியில் வருவாய்த்துறை; தென்காசியில் உள்ளாட்சித்துறை

கோவில்பட்டி:  கோவில்பட்டி அருகே 12 கிராம பஞ்சாயத்துகளை தூத்துக்குடி மாவட்ட  உள்ளாட்சிகளுடன் இணைக்கக் கோரி மக்கள் போராடி வரும் நிலையில் நெல்லை  மாவட்டத்தில் இருந்த உள்ளாட்சிகள் தற்போது தென்காசி மாவட்டத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் தாலுகாவில் அடங்கியிருந்த  இளையரசனேந்தல் உள்ளிட்ட 12 வருவாய் கிராமங்களை தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கக் கோரி அந்த கிராம மக்கள் 40 ஆண்டுகளாக  போராடி வந்தனர். பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் சட்டசபையில்  அறிவிக்கப்பட்டு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2008ம் ஆண்டு  அப்போதைய திமுக ஆட்சியில், சங்கரன்கோவில்  தாலுகாவில் இருந்த இளையரசனேந்தல் உள்ளிட்ட 12 வருவாய் கிராமங்கள்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவுடன் 1.5.2008ல்  இணைக்கப்பட்டது. இதனால் 40 ஆண்டு கால கனவு நனவானது.

அதன் பின்னர்  படிப்படியாக வருவாய்த்துறை முழுமையாக இணைக்கப்பட்டது. இதையடுத்து  காவல், நீதி, வேளாண்மை, நெடுஞ்சாலை, சுகாதாரம்,  பள்ளிக்கல்வி, கால்நடை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகள்  தூத்துக்குடி மாவட்ட வரம்பினுள் கொண்டு வரப்பட்டது.  கோவில்பட்டி  நகரத்திலேயே மேற்படி கிராமங்களின் பொதுமக்கள், வாகனங்கள் பதிவு,  ஆர்டிஓ  அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், அரசு சார்ந்த விவசாய விளைபொருட்கள்  பெறுதல், நெடுஞ்சாலைத்துறை கோட்டம், கால்நடை மருத்துவமனை, மாவட்ட அரசு  மருத்துவமனை, நீதிமன்றங்கள், மாவட்ட கல்வி அலுவலகம் ஆகிய வசதிகளை  பெற்று வருகின்றனர். இதேபோல ஊரக வளர்ச்சித்துறையில்  அடங்கியுள்ள பஞ்சாயத்து யூனியன் நிர்வாகம், குருவிகுளம் யூனியனில் இருந்து  பிரித்து கோவில்பட்டி யூனியனுக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் உள்ளாட்சி  நிர்வாகம் மாறாமல் தொடர்ந்து குருவிகுளம் யூனியனிலேயே  இன்று வரை இருந்து வருகிறது.

இதனால் வருவாய் மாவட்ட நிர்வாகம்  தூத்துக்குடியிலும், உள்ளாட்சி அமைப்பானது நெல்லை மாவட்ட பஞ்சாயத்து  நிர்வாக எல்லைக்குள் தொடர்ந்து வைக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் பெரும்  சிரமப்பட்டனர். இதனை எதிர்த்து 12 கிராம பஞ்சாயத்து மக்கள் தொடர்ந்து  ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், அறப்போராட்டம், சாலை மறியல், ஆதார் அட்டைகளை  ஒப்படைத்தல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் இல்லை. இந்த 12 கிராம பஞ்சாயத்துகளும் கோவில்பட்டியில் இருந்து 1 கிமீ முதல் 12 கிமீ தொலைவிலேயே அமைந்து உள்ளன. ஆனால் குருவிகுளம்  யூனியன் அலுவலகத்திற்கு கிராம மக்கள் செல்ல, கோவில்பட்டிக்கு வந்து பின்னர்  27 கிமீ தூரத்தில்  குருவிகுளம் யூனியன் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய  நிலை உள்ளது.

இந்த 12 கிராம பஞ்சாயத்துகளை பொறுத்தவரை வருவாய்  நிர்வாகத்திற்கு மட்டுமே தூத்துக்குடி கலெக்டர் பொறுப்பு உடையவர் என்பதால்,  உள்ளாட்சி நிர்வாகம் தொடர்புடைய மனுக்களை நெல்லை கலெக்டருக்கு  பரிந்துரைக்கும் நிலை உள்ளது.  இதனால் கிராம மக்களுக்கு தேவையற்ற அலைச்சலும், காலதாமதமும் ஏற்படுகிறது. இதனால்  தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடந்த  போதிலும் இந்த 12 கிராமங்களும் நெல்லையில் இருப்பதால் தேர்தல்  நடத்தப்படவில்லை.  இந்நிலையில் தற்போது உள்ளாட்சி எல்லை மறுவரையில் நெல்லை  மாவட்டத்தில் இருந்த 12 கிராம பஞ்சாயத்துகளை 90 கிமீ தூரத்தில் உள்ள  தென்காசி மாவட்டத்திற்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்னையை வார்டுகள் மறுவரையறையின் போது கூட அதிகாரிகள் கண்டு கொள்ளாதது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனவே  கிராம மக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்களின் நலன் கருதி தமிழக  அரசும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்ட  நிர்வாகங்களுடன் இந்த பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த  அரசாணை பிறப்பித்து முக்கோண சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பதே 12 கிராம பஞ்சாயத்து மக்களின் கோரிக்கையாகும். அதாவது,  கோவில்பட்டி அருகில் உள்ள இளையரசனேந்தல் பிர்க்காவிற்கு உட்பட்ட 12 கிராம  பஞ்சாயத்துகளையும் கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வேண்டும் அல்லது   இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிதாக ஊராட்சி ஒன்றியம் உருவாக்கி  தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின்  கோரிக்கையாகும்.

விரைவில் முடிவு கிட்டும்

கோவில்பட்டி  தாலுகா இளையரசனேந்தல் குறுவட்டத்தில் இளையரசனேந்தல், லட்சுமியம்மாள்புரம்,  அய்யனேரி, அப்பனேரி, புளியங்குளம், வடக்குபட்டி, பிச்சைதலைவன்பட்டி,  பிள்ளையார்நத்தம்,  நக்கலமுத்தன்பட்டி, முக்கூட்டு மலை உட்பட 11  கிராமங்களும், கழுகுமலை குறுவட்டத்தில் ஜமீன்தேவர்குளம் ஆகிய 12 வருவாய்  கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த 12 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்டு  பிள்ளையார்நத்தம், ஜமீன்தேவர்குளம், வடக்குபட்டி, பிச்சைதலைவன்பட்டி,  இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், அய்யனேரி, அப்பனேரி, புளியங்குளம்,  நக்கலமுத்தன்பட்டி, முக்கூட்டுமலை உட்பட 12 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

   இதுதொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதி மன்ற மதுரை  கிளையில் வழக்கு தொடர்ந்து இன்றுவரை வழக்குகளை சந்தித்து வரும்  ஜமீன்தேவர்குளம் கிராமத்தின் முன்னாள் ராணுவ வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி  கூறுகையில், ‘வருவாய் நிர்வாகம் இணைந்த உடனேயே கடந்த 2008ம் ஆண்டு  உள்ளாட்சி அமைப்பும் தூத்துக்குடி மாவட்ட வரம்பினுள் வந்திருக்க வேண்டும்.  இதுசம்பந்தமாக பொதுமக்களுடன் அமைச்சர்  கடம்பூர் ராஜூவை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அப்போது அமைச்சர்  தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம்  எங்களை அழைத்து சென்று கோரிக்கை குறித்து கூறினார். இதனால் இந்த  பிரச்னைக்கு விரைவில் நல்ல முடிவு கிட்டும் என நம்பிக்கை உள்ளது’, என்றார்.

கலெக்டருக்கு பரிந்துரை

இந்த பிரச்னை குறித்து கோவில்பட்டி ஆர்டிஓ விஜயாவிடம் கேட்ட போது, ‘இளையரசனேந்தல் பிர்க்காவிற்கு உட்பட்ட 12 வருவாய் கிராமங்கள் தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள நிலையில் இந்த பிர்க்காவிற்கு  உட்பட்ட 12 கிராம பஞ்சாயத்துகளையும் கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க  வேண்டும் அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம்  அமைக்க வேண்டும் என கிராம மக்கள் என்னிடம் மனு அளித்துள்ளனர். இந்த  மனுக்களை அரசிடம் கொண்டு செல்ல தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின்  பரிந்துரைக்கு அனுப்பி உள்ளேன்’, என்றார்.


Tags : Government ,villages ,Tenkasi ,Kovilpatti ,paddy field ,Kettan , 12 villages near Kovilpatti in Kettan, both in paddy field Local Government in Tenkasi
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...